தவெகவுக்கு ஆதரவா... இடதுசாரிகளுடன் இணைந்து முடிவெடுப்போம்! திருமா
8 வைகாசி 2026 வெள்ளி 07:38 | பார்வைகள் : 1375
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஒரு முடிவை எடுப்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் விசிக சார்பில் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசியதாவது; தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக நாளை (மே 8) எங்கள் கட்சியின் கூட்டம் முடிந்த பிறகு, நிலைப்பாட்டினை சொல்வோம். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள நிலையில், அவர்கள் மாநிலக் குழுவில் எடுக்கும் முடிவை அறிந்துதான், எங்களின் முடிவை நாங்கள் அறிவிப்போம். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஒரு முடிவை எடுப்போம்.
அதிமுக, திமுக கூட்டணி என்பது ஒரு வடிவத்திற்கு வந்ததைப் போல தெரியவில்லை. அப்படி வந்தால் அப்போது எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் சொல்வோம். ஒரு யூகமாக நாங்கள் சொல்ல முடியாது. இதுவரையில் தவெக நிர்வாகிகளை நாங்கள் சந்திக்கவில்லை. வாட்ஸப்பில் கடிதம் அனுப்பினார்கள். தொலைபேசியில் அழைத்து பேசினார்கள். பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று சொன்னேன்.
கவர்னரின் அணுகுமுறை அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. பொதுவாக, இதுவரையில் இருந்த மரபு என்னும் அடிப்படையில் தனிப்பெரும் கட்சியை பதவி ஏற்க அனுமதிப்பது, அதன்பிறகு சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்ற நடைமுறையைத் தான் பின்பற்றி வந்ததாக நாம் அறிவோம். இப்போது, 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்று கவர்னர் சொல்லியிருப்பதாகவும், அதை இதுவரையில் அவர் காண்பிக்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக தந்திருப்பதாக தெரிகிறது.
இது திட்டமிட்டு அவர்கள் தரும் நெருக்கடியாகத் தான் அறிய முடிகிறது. அதற்கு, காங்கிரசோடு, தவெக கொண்டுள்ள நட்பும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதை ஒரு காரணமாக வைத்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல, எனக் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan