Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் லாப்ஸ் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக திங்கட்கிழமை பாரிய போராட்டம்

இலங்கையில் லாப்ஸ் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக திங்கட்கிழமை பாரிய போராட்டம்

7 வைகாசி 2026 வியாழன் 17:30 | பார்வைகள் : 167


மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் திங்கட்கிழமை (11) லாப்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த எரிவாயு அடுப்பில் இருந்து வரும் நெருப்பை போல நாட்டு மக்களையும் முடிந்தால் எரித்துச் சாம்பலாக்கிவிடுங்கள். நுகர்வோரையும், உணவக உரிமையாளர்களையும் நடுத்தெருவுக்கு கொண்டு வரும் வகையில் இந்த விலையேற்றம் அமைந்துள்ளது. குறிப்பாக சமையலறையில் முடங்கியிருக்கும் தாய்மார்களை இந்நடவடிக்கை பாரியளவில் பாதிக்கும். இத்தகைய நடவடிக்கை ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் ஆகும். அத்துடன் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு வீழ்ச்சியடையும் என்று கூறி மக்களை பயமுறுத்த வேண்டாம்.

மேலும் வர்த்தக அமைச்சரால் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் லாஃப்ஸ் நிறுவனம் தன்னிச்சையாக செயற்படுகிறது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். போதியளவு எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காத நிலையில் விலையை மட்டும் உயர்த்துவதில் பயனில்லை. சந்தையில் நீல நிற சிலிண்டர்கள் போதியளவு காணப்படுவதனால் நுகர்வோர் தன்னிடமுள்ள வெற்றுச் சிலிண்டர்களை நிறுவனத்திடமே ஒப்படைத்து விட்டு தற்போதைய சந்தை விலைக்குரிய பணத்தை பெற்றக்கொள்ள வேண்டும். இவற்றுக்கெல்லாம் இறுதி எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவில் அமைப்புகளுடன் இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரியளவில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், செவ்வாய்க்கிழமை வர்த்தக அமைச்சுக்கு முன்பாகவும் போராட்டத்தை முன்னேடுக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.