Paristamil Navigation Paristamil advert login

கூடாநட்பு காங்கிரஸ் திமுகவை கைகழுவியது; தவெக பக்கம் தாவல்!

கூடாநட்பு காங்கிரஸ் திமுகவை கைகழுவியது; தவெக பக்கம் தாவல்!

7 வைகாசி 2026 வியாழன் 06:05 | பார்வைகள் : 109


கூடாநட்பு என்று கருணாநிதியால் விமர்சிக்கப்பட்ட காங்கிரஸ், இன்று திமுகவை கைகழுவி விட்டு தவெகவுடன் கூட்டணியில் இணைந்தது. அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல் அனைத்திலும் இனி தவெகவுடன் தான் கூட்டணி என்றும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

மத்தியில் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது. அதில் அங்கம் வகித்த திமுக மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த வழக்கில், ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் மன வருத்தம் அடைந்த கருணாநிதி, 'கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை புரிந்து பணியாற்றும்படி தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

காங்கிரஸ் உடனான கூட்டணியை மனதில் வைத்து அவர் இவ்வாறு கூறினார். கடைசியில், இலங்கை தமிழர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, 2013ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதாக திமுக அறிவித்தது. தொடர்ந்து நடந்த 2014 பார்லி தேர்தலில் திமுக, காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டன. அந்த தேர்தலில் இரு கட்சிகளுக்கும் தோல்வியே பரிசாக கிடைத்தது; யாருடனும் கூட்டணி வைக்காத அதிமுக 37 இடங்களை வென்றது.

வேறு வழியில்லாத நிலையில் 2016ம் ஆண்டு தேர்தலில் திமுகவும், காங்கிரசும் மீண்டும் கூட்டணி அமைத்தன. இந்த சிறிது கால இடைவெளி தவிர 22 ஆண்டுகளாக இரு கட்சிகள் இடையே கூட்டணி தொடர்ந்தது. அந்த கூட்டணி, தவெகவுக்கு ஆதரவு என்ற காங்கிரசின் முடிவால் முறிந்துள்ளது.

தமிழகத்தில் அமையவிருக்கும் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்தது. அடுத்து வரவிருக்கும் லோக்சபா, உள்ளாட்சி தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று  காங்கிரஸ் அறிவித்துள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு முன் ராஜ்யசபா எம்பி பதவியை பெற்றுக்கொண்ட காங்கிரஸ், கூட்டணியை முறித்து கொண்டு தவெகவுக்கு தாவி இருப்பது, திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆதரவுடன் அண்மையில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் ராஜ்யசபா எம்பி ஆனது குறிப்பிடத்தக்கது.