Paristamil Navigation Paristamil advert login

யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்குக் வழங்குமாறு கோரிக்கை விடுத்த அர்ச்சுனா

யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்குக் வழங்குமாறு கோரிக்கை விடுத்த அர்ச்சுனா

5 வைகாசி 2026 செவ்வாய் 14:23 | பார்வைகள் : 1759


கச்சதீவை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்றும், அப்போது தமிழக மக்கள் எங்களைப் பாதுகாப்பார்கள் என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, வடக்கின் தீவுப் பகுதிகளில் மின்சார விநியோகம் இல்லாமை தொடர்பில் கேள்வியெழுப்பி உரையாற்றுகையிலேயே அர்ச்சுனா எம்.பி. இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்:

"தமிழ் மக்களின் இதயத்தைக் கவர்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு, 'இலங்கைத் தமிழன்', 'அடக்கப்பட்ட தமிழன்' என்ற ரீதியில் ஒரு தமிழ்க் குரலாக இந்தப் பாராளுமன்றத்தில் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் தீவுப் பகுதிகளில் பாதிக்கு மேற்பட்ட மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. அங்கு வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மின்சாரம் இருப்பதில்லை.

இவ்வாறான நிலைமையில், கச்சதீவை நடிகர் விஜய் கேட்டிருக்கின்றார் என்பதற்காக, 'கச்சதீவைத் தரமாட்டோம்' என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால், நாங்கள் கச்சதீவை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்குக் கொடுக்கச் சொல்கின்றோம். தமிழக மக்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள்," என்றார்.