Paristamil Navigation Paristamil advert login

விஜய் பெயரில் சூதாட்டம் நடைபெறுகிறது; திருமா பேட்டி

விஜய் பெயரில் சூதாட்டம் நடைபெறுகிறது; திருமா பேட்டி

4 வைகாசி 2026 திங்கள் 09:09 | பார்வைகள் : 239


தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பின்பு தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் நடப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; பெரும்பாலான நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகளில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறார்கள். திமுக தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒருசில நிறுவனங்கள் அதற்கு நேர்மாறான கருத்துக்களை கூறியிருக்கின்றன. களத்தில் நேரடியாக மக்களை சந்தித்து இருக்கிறோம். அதனடிப்படையில், எங்களுடைய பார்வை, திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். ஆகவே, எங்களின் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக ஆட்சி தொடரும்.

எங்கள் கட்சியினரை நெறிபடுத்துவதற்காக சில கருத்துக்களை நான் கூறியிருப்பேன். ஒரு சில தொகுதிகளில் இருந்து உட்கட்சி பிரச்னை காரணமாக  எங்களின் கட்சியினர் அவ்வாறு செயல்பட்டிருப்பார்கள். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக எங்கள் கட்சியின் ஆற்றியிருக்கும் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெளிப்படையாகவே அதை பேசியிருக்கிறார்கள். ஓரிரு இடங்கள் என்று நான் சொன்னதற்கு ஊதிப்பெரிதாக்குகிறார்கள். மீண்டும் மீண்டும் விசிகவை குறிவைத்து, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் கனவு நினைவாகவில்லை. அவர்களின் ஆசையில் மண் விழுந்து விட்டது. திமுக கூட்டணியை சிதறடிக்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார்கள். அத்தனை சதிகளையும் விசிக முறியடித்துள்ளது.  மீண்டும் அவர்கள் ஏமாந்து போவார்கள்.

கூடுதல் பாதுகாப்பு தேவை என்று தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம் எழுதியிருப்பது வழக்கமான ஒன்றுதான். ஓட்டு எண்ணிக்கையின் போது உரிய பாதுகாப்பை தர வேண்டும் என்பது திமுகவின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.

வட இந்தியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனங்கள் தான் தொங்கு சட்டசபை அமையும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்டவர்கள், பாஜ மற்றும் வலதுசாரி கருத்துக்களை ஆதரிக்கும் நிறுவனங்கள் தான் அவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றனர். விஜய் பெயரில் ஏராளமான சூதாட்டம் நடக்கிறது.  இந்த சூதாட்ட கும்பல் பரப்பும் வதந்தி தான் இது. தேர்தலுக்கு முன்பு திமுகவை முன்வைத்து சூதாட்டத்தை நடத்தினார்கள். அகில உலகளவில் இது நடக்கிறது. இப்போது, தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பின்பு விஜய்யை முன்வைத்து இந்த சூதாட்டக் காய்களை நகர்த்துகின்றனர். தேர்தல் முடிவுக்கு பிறகு இவர்கள் ஏமாந்து போவார்கள்.

முன்னாள் டிஜிபி என்பதால் (முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி) அவரது கருத்துக்கணிப்பு சரியாகி விடுமா? 100 சதவீதம் இது சூதாட்டம் தான். தொங்கு சட்டசபை வரும் என்று நான் முன்பு கூறியது என்னுடைய வியூகம். ஆனால், அதுபோன்று இல்லை. களத்தில் நான் நேரடியாக 40 தொகுதிகளுக்கு மேல் பிரசாரம் செய்துள்ளேன். நேரடியாக பார்த்த வரையில், திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக தனித்தே ஆட்சியமைக்கும்.

விஜய்க்கு ஓட்டு போட்டவர்களை தற்குறிகள் என்று கூறிய திமுக மாணவரணி வீரமணி ஜெயக்குமாரின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. மக்களை கொச்சைப்படுத்தக் கூடாது. ஓட்டு போட்டாலும், போடாவிட்டாலும், மக்களை உரிய முறையில் மதிக்க வேண்டும்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு புதிய கட்சி தோன்றும் போதும்,  நடிகர்கள் கட்சிக்கு வரும் போது, அவர்களுக்கு பின்னால், ஒரு திரள் கூடுவது வழக்கமான ஒன்று தான். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது, சமூகவலைதளங்கள் கிடையாது. இன்று சமூகவலைதளங்கள் அதனை உயர்த்தி பிடிக்கின்றன. எப்போதுமே, திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி என்று உயர்த்தி பிடிக்கும் அரசியலைத் தான் இப்போதும் உயர்த்தி பிடிக்கிறார்கள். இப்போது அதன் எண்ணிக்கை வேண்டுமானாலும் கூடியிருக்கலாம். சதவீதம் கூடியிருக்கலாம். ஆனால், அவர்கள் தனித்து வெற்றி பெறுவதற்கோ, ஆட்சியை கைப்பற்றுவதற்கோ வாய்ப்பில்லை என்று தான் பெரிதும் நம்புகிறேன்.

இளைஞர்கள் பெரிதும் விஜய்க்கு எதிராகவும் ஓட்டு போட்டுள்ளனர். விஜய்க்கு எதிராக பேசும் இளைய தலைமுறையினர் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், 100 சதவீதம் இளைஞர்களும் ஒரு நடிகருக்கு பின்னால் போய் விட்டதாக தோற்றத்தை உருவாக்குகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.