Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்படலாம் - ஜனாதிபதி

இலங்கையில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்படலாம் - ஜனாதிபதி

2 வைகாசி 2026 சனி 11:59 | பார்வைகள் : 129


வலுசக்தி துறையில் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மே தினப் பேரணையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "வலுசக்தி துறையில் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலை பாரிய அளவில் அதிகரித்து வருகின்றது.

இன்றும் ஒரு லீற்றர் டீசல் 382 ரூபாவாக உள்ளது. அரசாங்கம் விற்பனை செய்யும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் 100 ரூபா மானியம் வழங்குகின்றது.

இன்றும் நீங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறும் ஒரு லீற்றர் டீசலின் விலை 482 ரூபாவாகும். ஆனால் நீங்கள் அதனை 382 ரூபாவிற்கே பெறுகிறீர்கள். அரசாங்கம் இதற்காக 100 ரூபாயை வழங்குகிறது. இது மக்களைக் கவனிக்கும் ஒரு அரசாங்கம்.

எரிபொருள் விலை இன்னும் அதிகரித்து வருகின்றது. இந்நாட்டு மக்களுக்குத் தேவையான எரிபொருள் மானியத்தை வழங்குவதற்காக நாங்கள் 6,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். உழைக்கும் மக்களின் அரசாங்கங்கள் அவ்வாறுதான் இருக்கும். எனினும், விலை மேலும் அதிகரிக்கின்றது.

எரிபொருள் விலையை மேலும் சிறிய அளவுகளில் அதிகரிக்க வேண்டியிருக்கும். நாம் அதிகபட்சமாக மானியங்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வலுசக்தி துறையில் நெருக்கடி நிலவுகிறது. நிலக்கரி விலை அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் ஓரளவுக்குக் குறைந்துள்ளது. அதன் காரணமாக சில விலை அதிகரிப்புகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும், மின்சார நுகர்வோரில் 96 சதவீதமானோருக்கு எந்தவித விலை அதிகரிப்பும் இன்றி மானியம் வழங்கத் தீர்மானித்துள்ளோம். அதற்காக 1,500 கோடி ரூபாயைச் செலவிடத் தீர்மானித்துள்ளோம்." என்றார்.