மே தினப் பேரணி: நாடு முழுவதும் 3 00 000 பேரை தாண்டியதாக CGT தொழிற்சங்கம் அறிவிப்பு!!
2 வைகாசி 2026 சனி 07:09 | பார்வைகள் : 2299
மே 1ம் திகதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணிகளில் பங்கேற்றோர் எண்ணிக்கையில் அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டுள்ளன. உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, நாடு முழுவதும் சுமார் 1,58,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ள நிலையில், CGT தொழிற்சங்கம் 3,00,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றதாக தெரிவித்துள்ளது. பரிஸில் மட்டும், அமைச்சகம் 24,000 பேரைக் குறிப்பிட்டுள்ள நிலையில், தொழிற்சங்கம் 1,00,000 பேர் திரண்டதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், திறந்திருக்கும் சிறு வணிக நிலையங்களில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எந்தவிதமான அவசரச் சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும் பிரதமர் செபாஸ்தியன் லெகோர்னு தெரிவித்தார். பணியாளர்களின் விருப்பம் மற்றும் சட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். சட்ட தெளிவின்மை நீடித்த போதிலும், பணியாளர்களுடன் செயல்படும் வெதுப்பகம் மற்றும் மலர் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டதாக அரசாங்கம் முன்பே அறிவித்திருந்தது.
மேலும், நாடு முழுவதும் நடைபெற்ற இந்த பேரணிகளில் மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பரிஸில் மட்டும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் பேரணிகள் அமைதியான முறையில் நடைபெற்றதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñez குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, Nantes நகரில் நடைபெற்ற பேரணியில் சுமார் 4,000 பேர் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேரணிக்குப் பிந்தைய கட்டத்தில் சில போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. காவல்துறையினருக்கு எதிராக கற்கள் எறியப்பட்டதையடுத்து, கண்ணீர் புகை பயன்படுத்தி அவர்கள் பதிலடி கொடுத்தனர். இதில் காயமடைந்த இரண்டு காவல்துறையினர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan