Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் யூத சமூகத்திற்கு பாதுகாப்பு வழங்க அதிரடி திட்டம்

பிரித்தானியாவில் யூத சமூகத்திற்கு பாதுகாப்பு வழங்க  அதிரடி திட்டம்

2 வைகாசி 2026 சனி 07:28 | பார்வைகள் : 257


பிரித்தானியாவில் வசிக்கும் யூத சமூகங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையை அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன்(Golders Green) பகுதியில் புதன்கிழமை அதிகாலை நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் யூத சமூகத்தை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 45 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை டேசர்(Taser) துப்பாக்கியை பயன்படுத்தி பொலிஸார் நிலைகுலைய செய்து பின்னர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

யூத சமூகத்தினருக்கு எதிராக பிரித்தானியாவில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு மீதான தங்களது அதிருப்தியை இஸ்ரேல் வெளிப்படுத்தியிருந்தது.

பிரித்தானியாவில் யூத சமூகங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை பேசிய பிரதமர், பிரித்தானியாவில் யூத சமூகங்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காவலர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

சமீபத்திய நிகழ்வுகளால் அச்சத்தில் இருக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் தீவிரவாத போக்கை கட்டுப்படுத்த சகிப்புத்தன்மையற்ற(Zero tolerance) அணுகுமுறையை பிரதமர் ஸ்டார்மர் முன்னெடுத்துள்ளார்.

யூத எதிர்ப்பு மற்றும் தீவிரவாதத்தை பரப்பும் எந்தவொரு குழுவையும், அறக்கட்டளைகளையும் உடனடியாக மூடும் அதிகாரங்களை அரசு அமுல்படுத்த உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சக்திகளை ஒடுக்கவும் புதிய சட்டங்கள் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யூத வெறுப்பு என்பது பழைய வெறுப்பு என்றும், அதை துடைத்தெறிய தொடர்ச்சியான நடவடிக்கை வேண்டும் என்றும் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியில் மரியாதை, சகிப்புத்தன்மை மற்றும் கண்ணியம் ஆகிய விழுமியங்களை பாதுகாக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து பிரதமர் ஸ்டார்மர் தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.