Paristamil Navigation Paristamil advert login

தங்கத்தை இந்தியா கொண்டு வருகிறது ரிசர்வ் வங்கி!

தங்கத்தை இந்தியா கொண்டு வருகிறது ரிசர்வ் வங்கி!

2 வைகாசி 2026 சனி 09:34 | பார்வைகள் : 140


வெளிநாட்டில் இருப்பு வைத்திருப்பது பாதுகாப்பில்லை என்பதால், தங்கத்தை இந்தியா கொண்டு வரும் முயற்சியை ரிசர்வ் வங்கி தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 104 மெட்ரிக் டன் தங்கம், இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.

உலகின் அனைத்து மத்திய வங்கிகளும், தங்கள் நாட்டு கரன்சிக்கு ஈடாக தங்கத்தை இருப்பு வைத்திருப்பது வழக்கம். அந்த வகையில், இந்திய ரிசர்வ் வங்கியும் பெருமளவு தங்கத்தை சந்தையில் வாங்கி இருப்பு வைத்துள்ளது.

இவ்வாறு வாங்கப்பட்ட தங்கம் 880 மெட்ரிக் டன், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வெவ்வேறு இடங்களில் உள்ளது. பிரிட்டனில் செயல்படும் பேங்க் ஆப் இங்கிலாந்து வங்கியிலும் கணிசமான தங்கம் இருந்தது.

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் ஏற்படும் சிக்கல்களால், வெளிநாடுகளில் தங்கம், அந்நியச் செலாவணி போன்றவற்றை இருப்பு வைப்பது பாதுகாப்பற்றது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 2023 உக்ரைன் போர் தொடங்கியபோது, ரஷ்யாவுக்கு சொந்தமான பெருமளவு அந்நியச் செலாவணி, வெளிநாட்டு வங்கிகளில் இருப்பில் இருந்தது. ஆனால், போருக்கு காரணமான ரஷ்யாவின் சொத்துக்களை பறிமுதல் செய்வதாக கூறி, ஜி7 நாடுகள் அந்த அந்நியச் செலாவணியை கைப்பற்றி விட்டன.

இதேபோல, தலிபான்கள் ஆப்கன் அரசை கைப்பற்றியபோதும், அந்நாட்டு அரசு கணக்கில் இருந்த அந்நியச் செலவாணி, அவர்களிடம் தரப்படவில்லை. இத்தகைய சிக்கல்களை கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இருப்பில் இருக்கும் தங்கத்தை இந்தியா கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.

அதன்படி பிரிட்டன் வங்கியில் இருக்கும் தங்கத்தின் கணிசமான பகுதி, இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்த தங்க கையிருப்பில், இந்தியாவில் இருந்த தங்கத்தின் அளவு 2023 மார்ச் மாதம் 37 சதவீதமாக இருந்தது. இப்போது இந்த அளவீடு, 77 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் மட்டும் 104 மெட்ரிக் டன் தங்கம், இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் 197 மெட்ரிக் டன் தங்கம், பேங்க் ஆப் இங்கிலாந்து வசம் உள்ளது. அதையும் இந்தியா கொண்டு வரும் முயற்சிகளை ரிசர்வ் வங்கி தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தியா மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகளும், மேற்கத்திய நாடுகளில் இருப்பு வைத்திருக்கும் தங்கத்தை, தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.