Paristamil Navigation Paristamil advert login

மூலப்பெயரிலான மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மத்திய அரசு

மூலப்பெயரிலான மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மத்திய அரசு

30 சித்திரை 2026 வியாழன் 07:16 | பார்வைகள் : 154


மூலப் பெயரிலான மருந்துகளை மட்டுமே, மத்திய அரசு மருத்துவ மனைகளில் பரிந்துரைக்க வேண்டும் என, மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களுக்கான, நெறிசார் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை, தேசிய மருத்துவ ஆணையம், மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது.

அதில், 'ஜெனரிக்' எனப்படும், மூலப் பெயர் கொண்ட மருந்துகளை மட்டுமே டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்பது பிரதான விதியாக இருந்தது. அதை மீறுவோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆட்சேபனைகள் எழுந்தன. மூலப் பெயர் கொண்ட மருந்துகளை பரிந்துரைப்பதில் தவறில்லை என்றாலும், அதன் தரத்தை எவ்வாறு உறுதி செய்வது என, கேள்வி எழுந்தது. பிரபல மருந்து நிறுவனங்களின் உற்பத்தி தரத்துக்கு, சிறிய அளவில் மருந்து உற்பத்தி செய்வோரால், ஈடு கொடுக்க முடியாது என, விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குணமடைவதில் காலதாமதம் ஏற்படவும், தரமற்ற மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என, இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்தது.

எனவே, நாட்டில் உற்பத்தியாகும் மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்துவதை ஒழுங்குமுறைப்படுத்திய பின், இத்தகைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதை ஏற்று, தேசிய மருத்துவ ஆணையம், அந்த விதிகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்தது.

இந்நிலையில், 2023 வழிகாட்டுதல்களை பின்பற்றி, மத்திய அரசு மருத்துவமனைகளில், மூலப்பெயர் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என, மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.