Paristamil Navigation Paristamil advert login

பங்களாதேஷில் அம்மை நோயால் 8 மாத குழந்தை உயிரிழப்பு

பங்களாதேஷில் அம்மை நோயால் 8 மாத குழந்தை உயிரிழப்பு

29 சித்திரை 2026 புதன் 17:09 | பார்வைகள் : 1629


பங்களாதேஷில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை 26.04.2026 உயிரிழந்த 8 மாத குழந்தையுடன் சேர்த்து, நோயின் விளைவால் இதுவரை மொத்தமாக 259 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த மொத்த உயிரிழப்புகளில் 43 மரணங்கள் நோய் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டவை என்றும் ஏனைய 216 மரணங்களும் சந்தேகத்துக்கிடமான மரணங்கள் என்றும் அந்நாட்டின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் கூறப்படுகிறது.

குஷ்டியா பகுதியைச் சேர்ந்த, உயிரிழந்த 8 மாத குழந்தை 16 நாட்களாக அம்மை நோயுடன் போராடிய நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே அம்மை நோய் மற்றும் அதன் அறிகுறிகளுடன் 8 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார சேவைப் பிரிவு புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது.

அதே நேர இடைவெளியில் அந்நாட்டில் மொத்தமாக 143 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,421 நோயாளர்களின் நோய் நிலைமை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றன.

மேலும், கடந்த மார்ச் 15ஆம் திகதி முதல் பங்களாதேஷில் 30,028 நோயாளர்கள் அம்மையால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 21,434 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 17,955 பேர் சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.