Paristamil Navigation Paristamil advert login

பிரபல பாடகியிடம் எல்லைமீறிய அந்த இசையமைப்பாளர் யார்?

பிரபல பாடகியிடம் எல்லைமீறிய அந்த இசையமைப்பாளர் யார்?

29 சித்திரை 2026 புதன் 13:32 | பார்வைகள் : 235


ஸ்டூடியோவில் வைத்து பிரபல இசையமைப்பாளர் தன்னிடம் அத்துமீறியதாக பாடகி ஸ்வாகதா பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எப்போது முடிவு வரும்?

இரவுக்கு ஆயிரம் கண்கள், காற்றின் மொழி, பேச்சுலர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் பாடல்கள் பாடியவர் பின்னணி பாடகியான ஸ்வாகதா. சென்னையில் வசித்து வரும் இவர், நடிகை மாயாவின் உடன் பிறந்த சகோதரி.

8 வருடங்களுக்கு முன் சினிமாவில் பாடல்கள் பாட ஆரம்பித்தவர் கடந்த சில வருடங்களாக பாடுவதை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் முடங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியே நடமாடிய ஸ்வாகதா, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்போது தமிழ்நாட்டில் பூகம்பமாக வெடித்துள்ளது.

காரணம்... சென்னையில் உள்ள பிரபல இசையமைப்பாளரின் ஸ்டூடியோவில் சில ஆண்டுகள் பணியாற்றிய பாடகி ஸ்வாகதா அந்த இசையமைப்பாளரால் பாலியல் சித்ரவதைக்கு உள்ளானதாகவும் கூறி, அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  படத்தில் பாட வாய்ப்பு தருவதாக சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்கிய இசையமைப்பாளர், தன்னிடம் அடிக்கடி பணம் வாங்கி ஏமாற்றியதாகவும், ஸ்வாகதா குற்றம் சாட்டியுள்ளார்.

சர்ச்சைக்குள்ளான அந்த இசையமைப்பாளர்... தன்னை போல மேலும் பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதை ஸ்டூடியோவில் ரகசியமாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும் ஸ்வாகதா அதிர்ச்சி அளித்துள்ளார்.

பெண்கள் மட்டுமல்லாது.. அவருடைய ஸ்டூடியோவிற்கு பாட வரும் சிறுமிகளிடமும் அந்த இசையமைப்பாளர் பாலியல் ரீதியாக எல்லைமீறியதாகவும்; எப்ஸ்டீனுக்கு எல்லாம் ராஜாதான் சென்னையில் இருக்கும் அந்த இசையமைப்பாளர் எனவும், அதிர்ச்சிகர தகவலை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.

ஒருகட்டத்தில் தன்னிடம் எல்லைமீறிய விவகாரம் இசையமைப்பாளரின் மனைவிக்கு தெரியவரும் போது.. தன் மீது பழிசுமத்தி தற்கொலை நாடகம் போட்டு அவரது மனைவியிடம் இருந்து தப்பித்ததாகவும் ஸ்வாகதா கூறியுள்ளார்.  சம்பவம் தொடர்பாக வெளியே கூறினால் எடுத்து வைத்திருக்கும் வீடியோவை சோசியல் மீடியாவில் லீக் செய்து விடுவேன் எனவும் அந்த இசையமைப்பாளர் மிரட்டினாராம்.

இந்த மோசமான சம்பவத்திற்கு பின் தான் ஆசைப்பட்ட இசைத் துறையை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகக் கூறியுள்ள ஸ்வாகதா, தன்னிடம் பாலியல் அத்துமீறிய அந்த இசையமைப்பாளரின் பெயரை மறைத்துள்ளார்.

நேரம் வரும் போது சட்ட ரீதியாக புகார் அளித்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக பாடகி கூறியுள்ள நிலையில்.. தற்போது இவ்விவகாரம் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையாகி உள்ளது. பாடகி ஸ்வாகதாவிடம் எல்லைமீறிய அந்த இசையமைப்பாளர் யார்? திரைத்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு எப்போதுதான் சுதந்திரம் கிடைக்கும்?  அவர்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் அத்துமீறல்களுக்கு எப்போது முடிவு வரும்? ஸ்வாகதா முறையாகப் போலீசில் புகார் அளித்தால் மட்டுமே பாலியல் அத்துமீறிய இசையமைப்பாளரின் உண்மை முகம் வெளியுலகிற்கு தெரியவரும்.