Paristamil Navigation Paristamil advert login

மே.வங்கத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு வன்முறை தடுக்க மும்முரம்

மே.வங்கத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு வன்முறை தடுக்க மும்முரம்

29 சித்திரை 2026 புதன் 13:54 | பார்வைகள் : 127


மேற்கு வங்க சட்டசபையின் இரண்டாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த பகுதிகள் கண்டறியப்பட்டு, என்.ஐ.ஏ.வுடன் மத்திய ஆயுத காவல் படையினரையும் பாதுகாப்பு பணியில் தேர்தல் கமிஷன் ஈடுபடுத்தியுள்ளது.

என்.ஐ.ஏ. அமைப்பு  தீவிர கண்காணிப்பு

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் உள்ளன. இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 152 தொகுதிகளுக்கு 23ம் தேதி ஓட்டு பதிவு நடந்தது. 93 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. மீதம் உள்ள 142 தொகுதிகளுக்கும், இன்று காலை 7:00 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கி, மாலை 6:00 மணிக்கு முடிகிறது.

வன்முறை நிகழாமல் தடுக்க என்.ஐ.ஏ. அமைப்பினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பதற்றம் நிறைந்த தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள தொகுதிகளில் என்.ஐ.ஏ. குழுக்கள் நேரடியாக களமிறங்கியுள்ளன. 2,321 கம்பெனி மத்திய ஆயுத காவல் படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது, கடந்த தேர்தல்களை விட இருமடங்கு அதிகம்.

இதுகுறித்து என்.ஐ.ஏ. உயரதிகாரி கூறியதாவது:

ஓட்டு பதிவின் போதும், பின்னரும் எழக்கூடிய எந்த அசம்பாவிதங்களையும் எதிர்கொள்ளும் வகையில் செயல்படுவோம். நாட்டு வெடிகுண்டுகள், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்குகளையும் தீவிரமாக விசாரிக்கிறோம்.

இவ்வாறு கூறினார்.

பயங்கரவாத தொடர்பு உள்ளதா

சமீபத்தில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாங்கர் பகுதியில் 79 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, இதில் பயங்கரவாத தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது.

முதல் முறையாக ட்ரோன் கேமரா மூலம் வான்வழி கண்காணிப்பு நடத்தவும் தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. வங்கதேச எல்லையையொட்டி உள்ள பெட்ராபோல் போன்ற முக்கிய எல்லை பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.