மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் மத விவகாரங்களில் அரசு தலையிடலாம்: சுப்ரீம் கோர்ட்
29 சித்திரை 2026 புதன் 12:49 | பார்வைகள் : 1493
மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது; அதே சமயம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கலாம்,'' என, சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில், பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் பல்வேறு மதங்களில் பின்பற்றப்படும் மத சுதந்திரத்தின் எல்லைகள் குறித்து, ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான இந்த அமர்வில், ஒன்பதாவது நாளாக நேற்று விசாரணை நடந்தபோது, ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா சார்பில் ஆஜரான வக்கீல் அக்ஷய் நாகராஜன், ''அரசியலமைப்பு சட்டப் பிரிவு 25(2)(ஏ) பிரிவின் கீழ், மத அமைப்புகளின் உரிமைகளில் அரசு தலையிட முடியாது,'' என வாதிட்டார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதி நாகரத்னா, ஒரு கோவிலில் ஆண்டு தேரோட்டம் நடக்கிறது என வைத்துக் கொள்வோம். அதற்காக கோவிலை சுற்றியுள்ள அனைத்து சாலைகளையும் அந்த மதத்தினர் மூடி விட முடியாது. அந்த சாலையை மூடுவதற்கும், மத சடங்குகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் உங்கள் மதம் சார்ந்த விழாவை தாராளமாக நடத்திக் கொள்ளலாம். அதற்காக சாலைகளை மறித்தால், அரசு நிச்சயம் தலையிடும், என்றார்.
வக்கீல் அஸ்வினி உபாத்யாயா வாதிடுகையில், ''கடந்த 2,000 ஆண்டுகளில் பாரதம் 25 பாகங்களாக துண்டாடப்பட்டது. மதப் பிரிவுகளால் கடைசி 200 ஆண்டுகளில் மட்டும் ஏழு நாடுகளாக பிரிந்து விட்டது.
சம்விதான் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு ஆங்கிலத்தில் பொருத்தமான வார்த்தை கிடையாது. ஏனெனில், ஆங்கிலம் வெறும் 26 எழுத்துகளை மட்டுமே கொண்டது. ஆனால், சமஸ்கிருதம் 52 எழுத்துகளை உடையது,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி மகாதேவன், ''நீங்கள் முக்கியமான விவாதத்தை விட்டு திசை மாறி செல்கிறீர்கள். சம்ஸ்கிருதத்தில் 52 எழுத்துகள் இருக்கலாம்.
ஆனால், தமிழில் அதை விட அதிகம். 247 எழுத்துகள் இருக்கின்றன. எனவே, அப்படியான விவாதங்களுக்குள் செல்லாமல், வழக்கின் மைய கருவை மட்டும் முன்வையுங்கள்,'' என்றார்.
ஹஸ்ரத் கவாஜா நிஜாமுதீன் அவுலியா தர்கா தரப்பில் ஆஜரான வக்கீல் நிஜாம் பாஷா, ''மத வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழைவதை முறைப்படுத்துவது என்பது நிர்வாகத்தின் ஒரு பகுதி,'' என்று வாதிட்டார்.
இந்த சமயத்தில் குறுக்கிட்ட நீதிபதி அமானுல்லா, ''நிர்வாகம் செய்வது என்பது, எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல், அராஜகமாக செயல்படுவதை குறிக்காது. தர்காவோ, கோவிலோ, அங்கு வழிபாட்டுக்கு என்று கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் வரிசைக்கிரமமா க இருக்க வேண்டும்.
அதற்கென்று ஒரு விதிமுறை இருக்க வேண்டும். அனைவரும் நான் நினைத்ததை செய்வேன் என்று கூற முடியாது. அதே சமயம் மதம் சார்ந்த விதிமுறைகள் அரசியலமைப்பின் அடிப்படை தன்மைகளை மீறுவதாகவோ, அல்லது பாகுபாடு காட்டுவதாகவோ இருக்கக் கூடாது,'' என்றார்.
கேரளாவை சேர்ந்த வக்கீல் மேத்யூஸ் நெடும்பரா, ''சபரிமலை வழக்கில் பக்தர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு தரப்படவில்லை. எனவே, 2018ல் வழங்கப்பட்ட சபரிமலை தொடர்பான தீர்ப்பு செல்லாதது எ ன அறிவிக்க வேண்டும் ,'' என கோரினார். இவ்வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan