ராணுவத்துக்கு அதிகம் நிதி ஒதுக்கும் நாடுகள் ரூ.8.71 லட்சம் கோடியுடன் இந்தியா 5ம் இடம்
29 சித்திரை 2026 புதன் 10:27 | பார்வைகள் : 122
உலக அளவில் ராணுவத்திற்காக அதிக நிதி செலவிடும் நாடுகளில், 8.71 லட்சம் கோடி ரூபாயுடன் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தான், சீனா உடனான பதற்றமான சூழலால் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் உலகளாவிய ராணுவ போக்குகளை ஆண்டுதோறும் கண்காணித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான, 2025ம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2025ல், உலகளவில் ராணுவத்துக்கு 88 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து 31 லட்சம் கோடி ரூபாயுடன் சீனா இரண்டாம் இடம்; 17 லட்சம் கோடி ரூபாயுடன் ரஷ்யா மூன்றாம் இடம்; 10 லட்சம் கோடி ரூபாயுடம் ஜெர்மனி நான்காம் இடம் பிடித்துள்ளன.
இந்த வரிசையில் இந்தியா 8.71 லட்சம் கோடி ரூபாயை ராணுவத்துக்காக ஒதுக்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டும் இதே ஐந்தாம் இடத்திலேயே இந்தியா நீடித்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட, 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை மற்றும் போருக்குத் தயார் நிலையில் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அவசர கால கொள்முதல் நடவடிக்கைகள் காரணமாக, கடந்த ஆண்டில் ராணுவத்துக்கான செலவு அதிகரித்துள்ளது.
இதே காலக்கட்டத்தில் பாகிஸ்தான் தன் ராணுவச் செலவை 11 சதவீதம் உயர்த்தி, 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகளாவிய ராணுவச் செலவு 268 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம். ரஷ்யா -- உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் ராணுவச் செலவு 14 சதவீதம் அதிகரித்துள்ளன.
உலக அளவில் இந்தியா, 8.2 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ளது. இருப்பினும் ஆயுத இறக்குமதி 2021 - 2025 காலக்கட்டத்தில் 4 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதை இந்தியா படிப்படியாகக் குறைத்து பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்து வருகிறது.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire
Scan