Paristamil Navigation Paristamil advert login

சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் எப்படியிருக்கு?

சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் எப்படியிருக்கு?

28 சித்திரை 2026 செவ்வாய் 16:56 | பார்வைகள் : 182


ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் இன்று நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, "32 மாத உழைப்பு, 5 பேர் கொண்ட குழுவின் எழுத்து.. இது எல்லாம் சாத்தியமானது சூர்யா சார் ஒருவரால் தான். வெறும் 45 நிமிடம் கதை கேட்டார், உடனே ஓகே சொன்னார். என் மனைவியே நம்பாமல் ஆச்சரியப்பட்டார்.

வழக்கமாக பெரிய ஹீரோக்கள் எல்லா காட்சிகளிலும் தாங்கள் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இதில் அவர் இல்லாத பல முக்கிய காட்சிகள் உண்டு. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் அதற்குச் சம்மதித்தார். "திரையில் அவரது கண்கள் பேசும் வித்தையே தனி. கமர்ஷியல் முதல் பாதி.. இரண்டாம் பாதியோ ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு 'High' கொடுக்கும்.

வலிமை அப்டேட்டிற்குப் பிறகு அதிகமாகக் கேட்கப்பட்டது கருப்பு படத்தின் அப்டேட் தான். இதற்காக முதலில் அடி வாங்கியது தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தான். ரசிகர்கள் அவரைத் தான் டார்கெட் செய்தார்கள். கடந்த 2 வருடப் பயணம் மிகக் கடினமானது. பல எதிர்பாராத மாற்றங்கள் நடந்தன.

ஆனால் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து எனக்கு முழு ஆதரவு அளித்தனர். நானும் எஸ்.ஆர். பிரபுவும் நிறைய சண்டையிட்டோம், விவாதித்தோம். ஆனால் இன்று நாங்கள் ஒரு குடும்பமாகிவிட்டோம். இந்தப் படத்திற்காக எனது 100% உழைப்பைக் கொடுத்துள்ளேன்.

ஏன் போஸ்டரில் தேதி போடவில்லை என ரசிகர்கள் கேட்கிறார்கள். தேதி போட்டால் சென்சார் போர்டு ஒரு குத்து குத்துறாங்க. அதான் தள்ளிப்போனது. சீக்கிரம் அதிகாரப்பூர்வமாகப் போடுவோம். ஆனா ஒன்னு.. பட்டாசு எடுத்து வைங்க, பண்டிகை வரப்போகுது. மே 14 படம் ரிலீஸ்" என்று அறிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்