Paristamil Navigation Paristamil advert login

கார்க் தீவில் மேற்கொண்ட தாக்குதல் - ஈரானின் அதிரடி எச்சரிக்கை

 கார்க் தீவில் மேற்கொண்ட  தாக்குதல்  -  ஈரானின் அதிரடி எச்சரிக்கை

14 பங்குனி 2026 சனி 10:31 | பார்வைகள் : 234


ஈரான் மீது கடந்த மாத இறுதியில் இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது. இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தைக்கு தயாராக இல்லை என அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கருதப்படும் கார்க் (Kharg) தீவு மீது அமெரிக்கா தாக்கியதை அடுத்து, இப்பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் எண்ணெய் நிறுவனங்களின் உட்கட்டமைப்புகளும் இலக்கு வைக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான 'கார்க் தீவு' (Kharg Island) மீதான தாக்குதல்களை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து ஈரானிய இராணுவம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மீது சிறிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு நன்மை பயக்கும் பிராந்தியத்திலுள்ள ஏனைய எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் "சாம்பல் மேடாக்கப்படும்" என ஈரானின் அல்-அன்பியா தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் நாடுகளிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் இந்தத் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

சுமார் 5 மைல் நீளம் கொண்ட இந்த சிறிய தீவு, ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. கார்க் தீவு அந்நாட்டின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாகக் கருதப்படுவதுடன், இது ஈரானின் 'பெட்ரோலிய உயிர்நாடி' என்றும் அழைக்கப்படுகிறது.

ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை இந்தத் தீவின் மூலமே முன்னெடுக்கின்றது. அத்துடன், ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் கொள்வனவாளரான சீனா, இந்தத் தீவிலிருந்தே எண்ணெயைப் பெற்றுக்கொள்கிறது.

எனவே, கார்க் தீவு மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் ஈரானிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கார்க் தீவு மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கப் படைகள் கார்க் தீவின் இராணுவ இலக்குகளைத் தாக்கினாலும், எண்ணெய் ஏற்றுமதி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் எரிபொருள் கப்பல்கள் மீது ஈரானோ அல்லது வேறு தரப்பினரோ தாக்குதல் நடத்தினால், இந்தத் தீர்மானம் குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.