Paristamil Navigation Paristamil advert login

லெபனானில் இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் - மனிதாபிமான சட்டத்தை மீறும் செயல்

லெபனானில் இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் - மனிதாபிமான சட்டத்தை மீறும் செயல்

9 பங்குனி 2026 திங்கள் 17:19 | பார்வைகள் : 291


தென் லெபனானின் குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதை குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 03 ஆம் திகதி தென் லெபனானின் யோஹ்மோர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும், அதன் காரணமாக இரண்டு வீடுகளில் தீப்பரவல் ஏற்பட்டதாகவும் ஏழு புகைப்படங்களின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவம் சட்டவிரோதமாக வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது மற்றும் பொதுமக்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் லெபனான் ஆய்வாளர் ராம்சி கைஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளை பொஸ்பரஸின் தீப்பற்றும் தன்மை மரணத்தையும் அல்லது வாழ்நாள் முழுவதும் துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய கடுமையான காயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் காற்றில் வெடிக்கும் வகையில் வெள்ளை பொஸ்பரஸைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானதாகும். இது பொதுமக்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனக் கூறும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாது.

இந்த வேதிப்பொருள் ஒட்சிசனுடன் தொடர்பு கொள்ளும் போது உடனடியாக தீப்பற்றும் தன்மை கொண்டது. இதனால் வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பிற சொத்துகள் தீப்பற்றி சேதமடையும் அபாயம் உள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்ததாவது, யோஹ்மோர் பகுதியில் பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் இந்த ஆயுதங்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இதன் விளைவாக வீடுகள் மற்றும் பொதுமக்களின் சொத்துகளில் தீப்பரவல்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும், மார்ச் 03 ஆம் திகதி காலை லெபனான் ஊடகங்களில் வெளியான ஒரு புகைப்படத்தை அந்த அமைப்பு சரிபார்த்து அதன் இடத்தையும் கண்டறிந்துள்ளது. அந்த புகைப்படத்தில் ஒரு குடியிருப்பு பகுதியின் மேல் குறைந்தது இரண்டு பீரங்கிகளின் மூலம் ஏவப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் காற்றில் வெடித்தது காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் கோபேரி மற்றும் ஹாரெட் ஹ்ரெய்க் பகுதிகளுக்கு இடையிலான பகுதிகளிலும், மேலும் சஃபிர் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் முழுவதும் இடம்பெற்ற இஸ்ரேல் தாக்குதல்களில் குறைந்தது 394 பேர் உயிரிழந்ததுடன், 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து  இஸ்ரேலின் முக்கிய கூட்டாளிகளான அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் இராணுவ உபகரணங்களின் விற்பனையை இடைநிறுத்தவும், கடுமையான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட பொருளாதாரத் தடை விதிக்கவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், 2023 அக்டோபர் முதல் 2024 மே மாதம் வரை தென் லெபனான் எல்லைப்புற கிராமங்களில் இஸ்ரேல் ஏற்கனவே வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்தியதாகவும், இதனால் பொதுமக்கள் மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026