Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்த சுவிஸ் குடிமக்களை அழைத்து வர அதிரடி நடவடிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்த சுவிஸ் குடிமக்களை அழைத்து வர அதிரடி நடவடிக்கை

7 பங்குனி 2026 சனி 10:39 | பார்வைகள் : 1018


ஈரான் போரால் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்த சுவிஸ் குடிமக்கள் சிலரை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று சுவிட்சர்லாந்தை வந்தடைந்துள்ளது.

ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் சுவிஸ் நாட்டவர்கள் 5,000க்கும் அதிகமானவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என சுவிஸ் அரசு மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது.

சுவிஸ் சர்வதேச விமான நிறுவன விமானம் ஒன்று, சூரிக்கிலிருந்து ஓமான் நாட்டுக்குச் சென்றது.

அந்த விமானம், ஓமானிலிருந்து 211 சுவிஸ் நாட்டவர்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன் தினம் மதியம் சூரிக் திரும்பியுள்ளது.

சுவிட்சர்லாந்திலிருந்து துபாய்க்கு விமானம் எதுவும் செல்லும் திட்டம் இல்லை என விமான நிறுவனம் கூறியுள்ள நிலையில், துபாயிலிருந்த சுவிஸ் நாட்டவர்கள் பலரும் சாலை வழியாக ஓமான் வந்தடைந்ததாகவும், அவர்களையும் ஏற்றிக்கொண்டு அந்த விமானம் சூரிக் வந்துள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடயம் என்னவென்றால், சுவிஸ் அரசு அவர்களை இலவசமாக அழைத்துவரவில்லை.

பயணிகள், ஆளுக்கு 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கியே அந்த விமானத்தில் பயணித்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.