Paristamil Navigation Paristamil advert login

இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் மம்தா: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் மம்தா: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

6 சித்திரை 2026 திங்கள் 13:37 | பார்வைகள் : 171


கமிஷன், கரப்சன் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு விளையாடி வருகிறது, என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேற்கு வங்க சட்டசபைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில், கூச்பெஹார் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் அச்சமின்றியும் தேர்தல் கமிஷன் நடத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

முன்பு மக்கள் மேற்கு வங்கத்திற்கு வேலை தேடி வந்தனர். தற்போது மாநிலத்தை  சட்டவிரோதமாக குடியேறியவர்களின் புகலிட மையமாக திரிணமுல் காங்கிரஸ் மாற்றிவிட்டது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு சவ ஊர்வலம் நடத்த திரிணமுல் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. அக்கட்சி தலைவர்கள் அரசு பணியில் ஊழல் செய்கின்றனர். ஊழலால் மாநிலத்தை கெடுத்த அவர்கள் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடி வருகின்றனர்.

வரும் 2029 ம் ஆண்டு லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டத்தை நிறைவேற்ற பார்லிமென்ட் கூட்டத்தொடரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இனிமேலும் யாராலும் இதில் தாமதம் செய்ய முடியாது.

திரிணமுல் காங்கிரசின் திருப்திபடுத்தும் அரசியலால், மேற்கு வங்கத்தின் அடையாளம் மாறி வருகிறது. ஊடுருவல்காரர்களை பாதுகாக்க எஸ்ஐஆர், சிஏஏ ஆகியவற்றை திரிணமுல் காங்கிரஸ் எதிர்த்து வருகிறது. ஊடுருவல்காரர்களுக்கு திரிணமுல் காங்கிரசின் சிண்டிகேட் பாதுகாப்பு அளித்து வருகிறது. மேற்கு வங்க மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அக்கட்சி ஆட்சியால், மாநிலத்தின் எல்லைப்பகுதியில் அபாயகரமான அளவுக்கு மக்கள் தொகையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பாஜ ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு உண்மையில் அதிகாரம் அளிக்கப்படும்.பணம், கமிஷன், கரப்சனால் இளைஞர்களின் எதிர்காலத்துடன் திரிணமுல் விளையாடி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.