Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் தேஜ கூட்டணி திவால் ஆக போகிறது: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தேஜ கூட்டணி திவால் ஆக போகிறது: முதல்வர் ஸ்டாலின்

6 சித்திரை 2026 திங்கள் 07:52 | பார்வைகள் : 190


தமிழகத்தில் தேஜ கூட்டணி  தான் திவால் ஆகப்போகிறது, என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மதுரையில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து  திருமங்கலத்தில் நடந்த  பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்  பேசியதாவது:


மதுரையின் வளர்ச்சி என்றால் திமுக தான்.  திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.  தேஜ முன்வைப்பது மதுரையை  மணிப்பூராக மாற்ற துடிக்கிற வன்முறை மாடல். அண்ணன் தம்பியாக அக்கா தங்கையாக உறவுமுறையோடும் பழகும் மதுரை மக்கள்  புத்திசாலிகள். அதனால்தான் கலவரத்தை தூண்ட நினைத்தவர்களின் சதியை சிறப்பாக முறியடித்தீர்கள். இதற்காக நன்றி கூறுகிறேன்.

அமைதியை விரும்புறவர்கள் நீங்கள். இதுதான்  தமிழகத்தின் டிஎன்ஏ. இதனை கெடுக்க என்டிஏ துடிக்கிறது. அவர்களின் அடிமையான இபிஎஸ். அதிமுகவை கெடுத்து குட்டிச்சுவராக்கியிருக்கிறார். அமைதியையும், வளர்ச்சியையம் சகோதரத்துவ பாசத்தை முன்னிறுத்தும் டிஎன்ஏவுக்கு மாறாக சொந்த மண்ணுக்கும், மக்களுக்கும் துரோகம் இழைக்கும் கட்சியாக என்டிஏ இருக்கிறது. இவர்கள் தான் டபுள் இன்ஜின் டபுள் இன்ஜின் என தமிழகத்திற்குள் வர நினைக்கின்றனர்.

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை 2015க்கு பட்ஜெட்டில் அறிவித்தனர்.2019  லோக்சபா தேர்தலில் அடிக்கல் நாட்டினர். 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் முடிந்துவிட்டது. 2026 சட்டசபை தேர்தல் வந்துவிட்டது. ஆனால், எய்ம்ஸ் வரவில்லை. மதுரை எய்ம்ஸ் பேப்பரில் உள்ளதே தவிர நிஜத்தில் இல்லை.

ஹிமாச்சல பிரதேசத்தில் 2017 ல் அடிக்கல் நாட்டி  2022 ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க முடிந்த அவர்களால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஏன் திறக்க முடியவில்லை.  ஏன் பாஜவால் நம்மை போன்று வேகமாக செயல்பட முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு தமிழகம் மீது இருக்கும் வெறுப்பு அப்படிப்பட்டது. அதனால் தான் கீழடி ஆய்வறிக்கையை இப்போதுவரை வெளியிட மறுக்கின்றனர்.

இரும்பின் பயன்பாடு தமிழ் நிலத்தில் இருந்து தான் நிரூபித்துள்ளோம். அந்த அறிக்கை வெளியிட்ட பிறகு பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து சொல்லவில்லை.

தமிழகம் மீது வன்மத்தோடு செயல்படும் என்டிஏவை வென்று வளர்ச்சி பாதையில் தொடர வேண்டும்.  10 ஆண்டு ஆட்சியில் தமிழகத்தை சீரழித்தது அதிமுக. துணைபோனது பாஜ. தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்துகிறது. இருந்தும் எதுவும் தெரியாதது போல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியுள்ளார். தமிழகத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.  தமிழகம் திவால் ஆகப்போகிறது என சொல்கிறார். எங்கள் ஆட்சியில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்பதை,  எங்கள் திட்டங்களை காப்பியடிக்கும் இபிஎஸ்சிடம் கேளுங்கள்.

மத்திய அரசின் பணம் எங்கே போகிறது என கேட்கிறார். அனைத்தும் மக்களுக்கு செல்கிறது. தமிழக மக்கள்,மத்திய அரசுக்கு செலுத்தும் பணம் எங்கே போகிறது. தமிழகத்துக்கு 89 ஆயிரம் கோடி கொடுத்துள்ளது என பியூஷ் கோயல் கூறியுள்ளார். நீங்கள் ஆட்சி செய்யும்  வட மாநிலங்களுக்கு அளித்த தொகையை தெளிவாக கூறினால், தமிழகத்தை எப்படி வஞ்சிக்கிறீர்கள் என்று தெரியும். இன்று உங்களுக்கு சவால் அளிக்கிறேன்.  தமிழகம் அளிக்கும் ஒரு ரூபாய்க்கு எங்களுக்கு எவ்வளவு கிடைக்கிறது . பாஜ ஆளும் மாநிலங்களுக்கு எவ்வளவு கிடைக்கிறது என சொல்ல முடியுமா? சொன்னால் உங்கள் குட்டு வெளிப்பட்டுவிடும்.

பாஜஆளும் வட மாநிலங்களுக்கு அளிக்கும் நிதி  பகிர்வை   தமிழகத்திற்கு அளித்தால், தமிழகத்தின் கடன்  அடைந்து நிதி நெருக்கடி  இருக்காது.பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது இதுதானா?

பாஜவுக்கு திமுக மீது  கோபம் அல்ல. தமிழகம் மீது வெறுப்பு தான்.இத்தனை நெருக்கடி கொடுத்தும்,  அனைத்திலும் நம்பர் 1 ஆக இருந்தால் வெறுப்பு வரத்தான் செய்யும். இந்தியாவின் முன்னேறிய மாநிலத்தை பார்த்து திவால் ஆகப் போகிறது என பியூஷ் கோயல் சொல்வது டூமச். என்டிஏ தான் தமிழகத்தில் திவால் ஆகப்போகிறது.

பரிட்சையில் பெயில் ஆன மாணவர்,  டாப்பர் ஆக இருக்கும் எங்களுக்குபாடம் எடுக்கலாமா? பாஸ் மார்க் எடுத்து வந்த பிறகு தமிழகம் பற்றி பேசுங்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.