அகில இந்திய தலைவர்களையே அதிர வைத்த தமிழக பாஜ தந்திரசாலிகள்
5 சித்திரை 2026 ஞாயிறு 12:57 | பார்வைகள் : 318
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் ஏராளமான குளறுபடிகளை சந்தித்துள்ளது பாஜ கட்சி. வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்குள் அக்கட்சி ஏகப்பட்ட குழப்பங்களை சந்தித்து விட்டது. இந்தியாவிலேயே கட்டுக்கோப்பான கட்சி என பெயர் எடுத்தது பாஜ., இக்கட்சியில் மட்டும் தான் இந்திய தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை அப்படியே கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொள்வார்கள்.
எதிர்த்துக் கேள்வி கேட்பது, அதிருப்தியில் தனி அறிக்கை விடுவது போன்ற வழக்கமெல்லாம் அக்கட்சியில் கிடையாது. தலைமை சொன்னால் சொன்னது தான். அதன் பிறகு தொண்டர்கள் வேலையை பார்க்க வேண்டியது தான். இப்படித் தான் அக்கட்சி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அக்கட்சியின் அகில இந்திய தலைவர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்துள்ளது.
தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது அக்கட்சி தலைவர்களுக்கு. இங்குள்ள ‛‛லோக்கல்'' தலைவர்கள் செய்த பிரச்னையில் சென்னை தி.நகரில் பிரதமர் நடத்துவதாக இருந்த ரோடு ஷோவை ரத்து செய்துள்ளார். பிரதமரே தனது நிகழ்ச்சியை ரத்து செய்யும் அளவுக்கு இங்குள்ள பாஜவினர் ‛‛திறமைசாலி''களாக இருப்பது, அகில இந்திய தலைவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் காலுான்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அத்தனை குழப்பங்களையும் அக்கட்சியின் தலைமை தாங்கிக்கொண்டு இருக்கிறது. இல்லாவிட்டால் இங்கு பிரச்னை செய்வோரின் அரசியல் எதிர்காலம் அவ்வளவு தான். இந்த குழப்பங்களுக்கு முக்கியமான ஒரு காரணம் உள்ளது. வட மாநிலங்களில் பாஜ கட்சிக்கு வருவோரில் பெரும்பான்மையானோர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து வந்திருப்பர். கடுமையான சட்டதிட்டங்களில் பயிற்சி பெற்றவர்கள்.
தலைமைக்கு எதிராக எதுவும் பேச மாட்டார்கள். கொள்கைக்காக மட்டுமே இருக்கும் இவர்கள், பதவிக்காக என்றும் ஆசைப்படாதவர்கள். கட்சியே அழைத்து ஏதாவது பதவி கொடுத்தால் தான் அதை ஏற்பார்கள். இல்லாவிட்டால் கடைசி வரை சாதாரண தொண்டராகவே காலத்தை கழிப்பார்கள். ஆனால் தமிழகத்தில் அப்படி ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து பாஜ கட்சிக்கு வந்தவர்கள் மிகவும் குறைவு. இப்போது இருப்பவர்களில் பெரும்பாலானோர் மற்ற கட்சிகளில் பதவி கிடைக்காமல் பாஜவுக்கு வந்தவர்கள்.
இவர்களுக்கு கொள்கை, கோட்பாடு, கட்டுப்பாடு என்று ஒரு புண்ணாக்கும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஏதாவது பதவியில் உட்கார்ந்துகொண்டு அதிகாரம் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள். இவர்களால் தான் இவ்வளவு பிரச்னையும். இவர்களை எல்லாம் ஒரு வழியாக சமாளித்து தான் பாஜ வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இனிமேலாவது எண்ணிக்கைக்காக கட்சியில் ஆட்களை சேர்க்காமல் கொஞ்சமாவது கொள்கை, கட்டுப்பாடு உள்ளவர்களை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பாஜவும் பத்தோடு பதினொன்று போல என்று தமிழக மக்கள் நினைத்துவிடுவார்கள். மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விடும். அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வது உள்ளூர் பாஜ தலைவர்கள் கையில் இருக்கிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan