Paristamil Navigation Paristamil advert login

இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரான் போர் முடிவுக்குக் கொண்டுவர முடியும் - டொனால்ட் ட்ரம்ப்

இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரான் போர் முடிவுக்குக் கொண்டுவர முடியும் - டொனால்ட் ட்ரம்ப்

1 சித்திரை 2026 புதன் 17:37 | பார்வைகள் : 210


ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களை இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "நாங்கள் மிக விரைவில் வெளியேறுவோம். இது இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நடக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

போரை நிறுத்துவதற்கு ஈரான் ஏதேனும் உடன்படிக்கையை எட்ட வேண்டுமா என்ற கேள்விக்கு, "இல்லை, ஈரான் என்னுடன் எந்த ஒப்பந்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை" என அவர் பதிலளித்துள்ளார்.

ஈரான் விவகாரம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்காக புதன்கிழமை இரவு 9 மணிக்கு ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

அமெரிக்காவின் 15 அம்ச போர்நிறுத்தத் திட்டத்தை ஈரான் ஏற்காவிட்டால் தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என வொஷிங்டன் முன்னர் எச்சரித்திருந்தது. ஆனால், தற்போது ட்ரம்ப் நிபந்தனையின்றி வெளியேறுவது குறித்துப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய ட்ரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை பலப்பிரயோகம் செய்தாவது மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் தயாராகி வருவதாக 'வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக ஐநா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தைப் பெறவும், ஈரானின் மூலோபாயத் தீவுகளை அமெரிக்கா கைப்பற்றவும் அமீரகம் பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃபிடமிருந்து நேரடிச் செய்திகள் வருவதாகவும், ஆனால் அவை முறையான "பேச்சுவார்த்தைகள்" அல்ல, வெறும் அச்சுறுத்தல்கள் மட்டுமே என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்துள்ளார்.

இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் மீது நாளை (புதன்கிழமை) முதல் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் புரட்சிகர இராணுவத்தினர் (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.