Paristamil Navigation Paristamil advert login

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் செய்வது ஓட்டு வங்கி அரசியல்; பிரதமர் குற்றச்சாட்டு

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் செய்வது ஓட்டு வங்கி அரசியல்; பிரதமர் குற்றச்சாட்டு

30 பங்குனி 2026 திங்கள் 12:25 | பார்வைகள் : 162


காங்கிரஸ் கூட்டணி மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணியின் அனைத்துக் கொள்கைகளும் ஓட்டு வங்கி அரசியலை மையப்படுத்தியே இருப்பதாக கேரள மாநிலம் பாலக்காட்டில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் இருந்து பாலக்காடு சென்ற அவர் ரோடு ஷோ நடத்தினார். வழியின் இருபுறங்களிலும் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது;

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் எங்கு ஆட்சிக்கு வந்தாலும், அனைத்தையும் பாழாக்கிவிடுவர் என்ற ஒரு வரலாறு அவர்களுக்கு உண்டு.  அவர்களின் அதே தீய திட்டங்களால் கேரளாவும் நசுக்கப்பட்டுள்ளது.

இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களைப் போலவே, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் நிலைமை மோசமாகத்தான் உள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகாவைப் பாருங்கள். அங்கேயும் பெரும்பாலான வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன. இமாச்சலப் பிரதேசமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதுதான் காங்கிரஸின் ஆட்சி மாடல். காங்கிரஸ் கூட்டணி மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணியின் அனைத்துக் கொள்கைகளும் ஓட்டு வங்கி அரசியலுக்காக மட்டுமே.

மேற்காசிய போரின் தாக்கம் இந்தியாவில் குறைவாக இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. போர் நடந்து வரும்  நாடுகளின் தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்.  அங்கு சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எப்படி அரசியல் செய்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். வளைகுடா நாடுகளில் வசிக்கும் ஒரு கோடி இந்தியர்களின் உயிரைப் பணயம் வைத்து, அதன் மூலம் அரசியல் லாபம் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது.

கேரளாவில் ஆட்சியமைப்பதற்காக பாஜ மற்றும் என்டிஏ கூட்டணி கட்சியினர் தொடர்ந்து களத்தில் உழைத்து வருகின்றனர். கேரள மக்களின் ஆசியுடன், நாங்கள் இங்கு ஆட்சி அமைப்போம். கேரள மக்களின் கனவுகளை நனவாக்குவதே என்டிஏ கூட்டணியின் இலக்காகும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கேரளாவுக்கு ஒதுக்கிய நிதியை விட, தற்போது  நாங்கள் 5 மடங்கு நிதி வழங்கியுள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.