Paristamil Navigation Paristamil advert login

ஹார்முஸ் முடக்கம் - உலகில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இலங்கை

ஹார்முஸ் முடக்கம் - உலகில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இலங்கை

28 பங்குனி 2026 சனி 12:05 | பார்வைகள் : 216


ஹார்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து தடை காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வடைந்து, அதன் மூலம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியின் கீல் (Kiel) உலகப் பொருளாதார ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை பல பொருட்களின் விலைகள் உயரக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.

ஹார்முஸ்  நீரிணை முழுமையாக மூடப்பட்டால், அது இலங்கைக்கு ஒரு பேரழிவுகரமான உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், உணவுப் பொருட்களின் விலை 15% க்கும் மேல் உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தில் சாம்பியா (31%) உள்ளதுடன், தாய்வான் (12%), பாகிஸ்தான் (11%) மற்றும் இந்தியா (10%) ஆகிய நாடுகளின் பெயர்களும்
பாதிக்கப்படகூடிய நாடுகளின் பட்டியலில் உள்ளடங்குகின்றன.

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி மற்றும் உரங்களை இறக்குமதி செய்யும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள், இந்த உணவு விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாகத் திறக்கப்பட்டாலும், உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நீண்ட காலம் நீடிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்நீரிணை முழுமையாக மூடப்படுவதால் உலகளவில் கோதுமை மாவின் விலை 4.2 சதவீதத்தாலும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை 5.2 சதவீதத்தாலும் உயரக்கூடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்நீரிணை ஊடாகவே இடம்பெறுகிறது. இதன் முடக்கம் காரணமாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளும் அதிகரித்துள்ளன.

எரிசக்தி விலை உயர்வைத் தொடர்ந்து ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைஉயர்வும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.