Paristamil Navigation Paristamil advert login

கோவில் சொத்துக்களை பதிவு செய்யும் அரசாணை வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கோவில் சொத்துக்களை பதிவு செய்யும் அரசாணை வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

26 பங்குனி 2026 வியாழன் 08:16 | பார்வைகள் : 275


கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை, பத்திரப்பதிவு செய்யும் வகையில், வெளியான அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தரப்பு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.

சேலம் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:

கோவில்களுக்கு சொந்தமான பல சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவை நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டு வருகின்றன. கோவில்கள், வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் வகையில், தமிழக வருவாய்த்துறை, 2025 செப்., 30ல் அரசாணை வெளியிட்டது.

அச்சொத்துக்களை பதிவுத்துறையில் பூஜ்ஜியம் மதிப்பில் பதிவேற்றம் செய்ய, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து, அரசாணை பிறப்பிக்க அத்துறைக்கு அதிகாரம் இல்லை. இது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.அக்., 30ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.இந்த வழக்கை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ராமன், ''அரசாணை பிப்., 19ல் திரும்பப் பெறப்பட்டுள்ளது. புது திட்டம் வகுக்கப்பட்டு, சட்டத்திற்குட்பட்டு புதிதாக அரசாணை வெளியிடப்படும்,'' என்றார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'அரசாணை திரும்பப் பெறப் பட்டுள்ளதால், இம்மனு காலாவதியாகிவிட்டது. தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றனர்.