Paristamil Navigation Paristamil advert login

ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் - உண்மைக் கேடயமாகத் திகழும் ஃபேக்ட் கிரஸண்டோவின் அதிரடி ஆய்வுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் - உண்மைக் கேடயமாகத் திகழும் ஃபேக்ட் கிரஸண்டோவின் அதிரடி ஆய்வுகள்!

21 பங்குனி 2026 சனி 07:49 | பார்வைகள் : 190


ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி போர் மூண்டது. போர் முனைகளில் ஏவுகணைகள் பாய்வதைப் போலவே, இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் போலிச் செய்திகள் அதிவேகமாகப் பரவி வருகின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில், போலித் தகவல்களுக்கு எதிரான கேடயமாகச் செயல்பட்டு வரும் ஃபேக்ட் கிரஸண்டோ (Fact Crescendo) நிறுவனத்தின் பணிகள் மிக முக்கியமானதாகவே காணப்பட்டது.

• செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிகள்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் தத்ரூபமாகத் தோன்றும் போலி வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.

1.அமெரிக்காவின் B2 குண்டுவீச்சு விமானம்: ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகப் பரவிய வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டது.

2.புர்ஜ் கலீஃபா தாக்குதல்: துபாயின் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் மீது 1,800 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் கூறப்பட்ட தகவல் AI தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட முற்றிலும் போலியான செய்தியாகும்.

3.3D விமான சித்திரங்கள்: அமெரிக்க செயற்கைக்கோள்களை ஏமாற்ற ஈரான் தனது விமான நிலையங்களில் 3D விமானங்களை வரைந்திருப்பதாகப் பகிரப்பட்ட படங்கள் உண்மையில் AI மூலம் உருவாக்கப்பட்டவை.Movies

• பழைய காணொளிகளுக்குப் புதிய சாயம் பூசி முன்பு நடந்த சம்பவங்களை தற்போதைய போருடன் தொடர்புபடுத்திப் பரப்புவது வதந்திகளின் ஒரு முக்கிய உத்தியாக காணப்படுகின்றது.

1.இஸ்ரேலிய விமான நிலையம்: பயணிகள் அலறி அடித்து ஓடுவதாக ஒரு காணொளி வைரலானது. ஆனால், அது 2025 ஜூலையில் டென்வர் விமான நிலையத்தில் ஒரு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் தீப்பிடித்தபோது எடுக்கப்பட்ட பழைய காட்சியாகும்.

2.இஸ்ரேலிய படை வீரர்கள்: குண்டுவெடிப்புகளுக்கு இடையே இஸ்ரேலிய வீரர்கள் சிதறி ஓடுவதாகக் கூறப்பட்ட வீடியோ, 2024 இல் ஹிஸ்புல்லா தாக்குதலின் போது எடுக்கப்பட்ட பழைய காட்சியாகும்.

3.சவுதி அரேபிய மக்கள் வெளியேற்றம்: மக்கள் நாட்டை விட்டு ஓடுவதாகப் பகிரப்பட்ட காணொளி, உண்மையில் ஜனவரி 2026 இல் மக்காவில் வீதி வியாபாரிகள் பொலீஸாரைக் கண்டு ஓடும் காட்சியாகும்.

4.CCTV கேமராக்கள் அகற்றம்: இஸ்ரேலியப் படையினர் குடியிருப்புகளில் உள்ள கேமராக்களை அகற்றுவதாகப் பகிரப்பட்ட காணொளி, 2025 இல் குற்றவியல் அமைப்புகளுக்குச் சொந்தமான கேமராக்களை பொலீஸார் அகற்றும் பழைய காட்சியாகும்.

உயிரிழப்புகள் மற்றும் தனிநபர்கள் குறித்து பகிரப்பட்ட வதந்திகள்

அமெரிக்க வீரர்கள் மரணம்: ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் 560 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட தகவல் தவறானது. உண்மையில், மார்ச் 13 வரையான நிலவரப்படி 11 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதற்காகப் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் 2004 இல் ஈராக்கில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.

நெதன்யாகுவின் சகோதரர்: இஸ்ரேலிய பிரதமரின் சகோதரர் இடோ நெதன்யாகு தாக்குதலில் பலியானதாகப் பரவிய காணொளி, உண்மையில் அமெரிக்காவின் நியூஜெர்சியில் ஏற்பட்ட ஒரு தீ விபத்து தொடர்பானது.

ஈரானிய ஜெனரல் தற்கொலை: ஈரானிய உச்சத்  தலைவரை அலி கமேனியை  காட்டிக் கொடுத்த ஜெனரல் நேரலையில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட காணொளியானது தற்போதைய போர் நிலையுடன் தொடர்புபடுத்தி சிங்களம் மற்றும் தமிழில் அதிகளவில் பகிரப்பட்டிருந்தமையை காணமுடிந்தது, ஆனால் குறித்த காணொளியானது 2024 இல் பதிவேற்றப்பட்ட ஒரு பழைய காணொளியாகும் மற்றும் அந்த நேரலையில் தற்கொலை செய்து கொண்டவர் ஈரானிய நாட்டவர் அல்ல என்பதுவும் கண்டறிப்பட்டது.

தகவல் இருளில் ஃபேக்ட் கிரஸண்டோ ஒரு ஒளிவிளக்கு

ஒரு யுத்தம் என்பது ஆயுதங்களால் மாத்திரம் நடத்தப்படுவதில்லை; அது தகவல்களாலும் நடத்தப்படுகிறது. இத்தகைய அசாதாரண சூழலில், ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் தனது பணிகளை மிகச் செம்மையாகவும் பொறுப்புடனும் ஆற்றியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவும் நுட்பமான AI போலிகளையும், பழைய சம்பவங்களை தற்போதைய செய்திகளாக மாற்றும் போலி உத்திகளையும் ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டி வருவதன் மூலம், ஒரு பெரும் சமூகப் பதற்றத்தைத் தவிர்க்க ஃபேக்ட் கிரஸண்டோ உதவியுள்ளது.

ஒரு பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்க உண்மையான தகவல்களை மாத்திரமே பகிர்வோம்.

நன்றி வீரகேசரி