புதுச்சேரி முதல்வர் கோபத்துக்கு அடிபணிந்த பா.ஜ.
19 பங்குனி 2026 வியாழன் 09:49 | பார்வைகள் : 166
புதுச்சேரியில், புதிதாக துவங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சியை தே.ஜ., கூட்டணியில் சேர்ப்பதில் ஏற்பட்ட கருத்து மோதலில், கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்.ஆர்.காங்., கட்சி தலைவர் ரங்கசாமியின் கட்டளைக்கு பா.ஜ., பணிந்தது. இதனால், திடீரென எழுந்த கூட்டணி முறிவு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்கிறது. என்.ஆர்.காங்., 16 தொகுதிகளிலும், மீதமுள்ள 14 தொகுதிகளில் பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கிட்டு கொள்ளவும் வாய்மொழியாக முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில், தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின், புதிதாக ஆரம்பித்த லட்சிய ஜனநாயக கட்சியை தங்கள் கூட்டணியில் இணைத்து, இரு தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்க பா.ஜ., முடிவு செய்தது. இதற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்., கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
பா.ஜ.,வினர், 'ல.ஜ.க., -- பா.ஜ.,வுடன் மட்டுமே கூட்டணி. எங்களுக்கான 14 தொகுதிகளில், அந்த கட்சிக்கு தொகுதியை பிரித்து கொடுக்கிறோம்' என, முதல்வர் ரங்கசாமியை சமாதானப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் புதுச்சேரி வந்த அம்மாநில பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரான மன்சுக் மாண்டவியா, என்.ஆர்.காங்., தலைவரான முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசி, தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய திட்டமிட்டிருந்தார். ஏனாம் சென்றிருந்த முதல்வர் ரங்கசாமி, அன்று இரவு 9:00 மணிக்கு புதுச்சேரி திரும்பியதும், தன் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து, வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, 'புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டோம்; தரவில்லை. கூட்டணியில் ல.ஜ.க.,வை சேர்க்கக்கூடாது என்று சொல்கிறோம்; கேட்கவில்லை' என, பா.ஜ.,விடம் தான் வைத்த நிபந்தனைகளை பட்டியலிட்டு, கட்சி நிர்வாகிகளிடம் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார். அத்துடன், 'இனியும் பா.ஜ., கூட்டணியில் தொடர வேண்டுமா?' என கேள்வி எழுப்பினார்.
ரங்கசாமியின் கருத்தை ஏற்றுக்கொண்ட என்.ஆர்.காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், 'ல.ஜ.க.,வை கூட்டணியில் சேர்த்தால் நாம் கூட்டணியில் தொடர வேண்டாம்' என, ஒருமித்த குரலில் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், என்.ஆர்.காங்., பொதுச்செயலர் ஜெயபால் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவினர், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, 'ல.ஜ.க.,வை கூட்டணியில் சேர்க்கக் கூடாது. மீறி சேர்த்தால், நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்' என கட்சியின் முடிவை தெரிவித்தனர்.
என்.ஆர்.காங்., கட்சியின் இந்த அதிரடி முடிவை தொடர்ந்து, பா.ஜ., புதுச்சேரி மாநில தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க., மாநில செயலர் அன்பழகன், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர்.
பின், மன்சுக் மாண்டவியா, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., தலைவர் ராமலிங்கம் ஆகியோர் அவசரமாக டில்லி புறப்பட்டு சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, முதல்வர் ரங்கசாமியின் நிபந்தனைகளை கூறினர்.
புதுச்சேரி அரசியல் சூழலை கேட்டறிந்த பா.ஜ., தலைமை, ல.ஜ.க.,வை கூட்டணியில் இருந்து கழற்றிவிட முடிவு செய்துள்ளது. இதையறிந்த ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், நேற்று மாலை தன் கட்சி நிர்வாகிகளை அழைத்து, அரசியல் சூழலை விளக்கி, 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதனால், நேற்று முன்தினம் இரவு, திடீரென முறியும் நிலைக்கு சென்ற புதுச்சேரி தே.ஜ., கூட்டணி, மீண்டும் புத்துயிர் பெற்று தேர்தலை சந்திக்க உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan