Paristamil Navigation Paristamil advert login

தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தேர்தல் கமிஷனின் ஒப்புதலைப் பெற ஆய்வுக்குழு நியமனம்

தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தேர்தல் கமிஷனின் ஒப்புதலைப் பெற ஆய்வுக்குழு நியமனம்

18 பங்குனி 2026 புதன் 14:22 | பார்வைகள் : 212


தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய தேர்தல் கமிஷன் கடந்த 15-ந் தேதி தமிழ்நாட்டுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் அரசாணைகளை பிறப்பிப்பதற்கு முன்பதாக அதை ஆய்வு செய்வதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக்குழு அமைப்பது அவசியமாகிறது.

அதன்படி, நியமிக்கப்படும் ஆய்வுக் குழுவுக்கு தலைமைச் செயலாளர் தலைவராக இருப்பார். பொது மற்றும் மறுவாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டிய துறையின் செயலாளர் ஆகியோர் அந்தக் குழுவின் உறுப்பினராக இருப்பார்கள். இந்தக் குழுவின் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகே, தேர்தல் கமிஷனின் ஒப்புதலுக்காக அந்த அரசாணை, தலைமை தேர்தல் அதிகாரி மூலம் அனுப்பப்பட வேண்டும்.

நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலகட்டத்தில், தேர்தல் கமிஷனின் ஒப்புதல் பெறுவதற்கு தேவைப்படும் எந்தவொரு முன்மொழிவும் இந்த ஆய்வுக் குழுவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஆய்வுக் குழுவின் ஒப்புதல் கிடைத்த பிறகே, அந்த முன்மொழிவுக்கான கோப்பை தலைமை தேர்தல் அதிகாரியின் மூலமாக அனுப்பி தேர்தல் கமிஷனின் ஒப்புதலை பெறவேண்டும். எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஆய்வுக்குழு கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.