Paristamil Navigation Paristamil advert login

மாங்காய் சாதம்..

மாங்காய் சாதம்..

12 மாசி 2026 வியாழன் 15:12 | பார்வைகள் : 157


மாங்காய் சீசன் வந்துவிட்டது. மாங்காய் சாதம் செய்து சாப்பிடாமல் இருந்தால் எப்படி..? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த சாதம் செய்ய 10 நிமிடங்களே போதுமானது. குழந்தைகளின் லஞ்சு பாக்ஸுக்கும் ஏற்ற சாதம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: சமைத்த அரிசி, துருவிய பச்சை மாங்காய், வேர்க்கடலை, கடலை பருப்பு உளுந்து, கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள், பெருங்காயம், எண்ணெய், சுவைக்கேற்ப உப்பு.

தயாரிக்கும் முறை: முதலில், வேக வைத்த சாதத்தை உலர்த்தி பெரிய கிண்ணத்தில் வைக்கவும். பின் மாங்காயை தோல் சீவி அதை பொடியாக சீவிக்கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், வேர்க்கடலையைச் சேர்த்து லேசாக பழுப்பு நிறமாகும் வரை வதக்கி தனியாக எடுத்துக்கொள்ளவும். பின்னர் கடுகு, கடலை பருப்பு மற்றும் உளுந்து சேர்த்து அவை வெடிக்கும் வரை வதக்கவும். இப்போது பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். மாங்காய் சாதத்திற்கு நல்ல மணம் வர, சிறிது பெருங்காயம் சேர்க்க மறக்காதீர்கள்.

துருவிய மாங்காயைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் சமைக்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். மாங்காயின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அடுப்பை அணைக்கவும். சாதம் சூடு தணிந்து தயாரானதும், மசாலா கலவையுடன் சேர்த்து, போதுமான உப்பு சேர்த்து நன்கு கிளறவும். துருவிய மாங்காயானது சாதத்துடன் ஒட்டிக்கொண்டு, மிகவும் புளிப்பு மற்றும் காரமான சுவையைத் தரும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்