Paristamil Navigation Paristamil advert login

பாடங்களை கற்குமா இலங்கை...?

பாடங்களை கற்குமா இலங்கை...?

11 மாசி 2026 புதன் 10:21 | பார்வைகள் : 254


இலங்­கையை  அண்­மைக்­கா­ல­மாக கடு­மை­யாக தாக்கி வரு­கின்ற இயற்கை அனர்த்­தங்­க­ள் வெறும்   இயற்கைச் சீற்­றங்களாக  மட்டும் வந்து செல்­ல­வில்லை. அவை ஒட்­டு­மொத்த தேசத்­திற்கும் மறக்க முடி­யாத, கசப்­பான பல பாடங்­களைக் கற்­றுக்­கொ­டுக்­கின்­றன. உதா­ர­ண­மாக ‘தித்வா’ அனர்த்­த­மா­னது பல படிப்­பி­னை­களை கற்­றுக்­கொ­டுத்­துள்­ளது.  

இந்த ‘தித்வா’ அனர்த்தம் ஏற்­ப­டுத்­திய வடுக்­கள் மிகவும் ஆழ­மா­னவை. 640-க்கும் மேற்­பட்ட உயிர்கள் பறி­போ­னதும், பில்­லியன் கணக்­கான டொலர் பெறு­ம­தி­யான சொத்­துக்கள் அழிந்­ததும், அனர்த்­தங்­களை எதிர்­கொள்ளும்  நாட்டின் தயார்­நிலை எவ்­வ­ளவு பல­வீ­ன­மாக இருந்துள்ளது  என்­பதைத் தோலு­ரித்துக் காட்­டி­யுள்­ளது. இயற்கைச் சீற்­றங்­களைத் தடுத்து நிறுத்த முடி­யா­விட்­டாலும், முறை­யான முன்­னா­யத்­தங்கள் இருந்தால் உயி­ரி­ழப்­பு­களைக் கண்­டிப்­பாகக் குறைக்க முடியும் என்­பதே ‘தித்வா’ நமக்கு  உரக்கச் சொல்­லிய பாட­மாகும். ஆனால் அனு­ப­வங்­க­ளி­லி­ருந்து பாடங்­களை கற்­கி­றோமா என்­பதே இங்கு முக்­கி­ய­மாகும்.  

இது குறித்து குறிப்­பிட்­டுள்ள கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி கணே­ச­மூர்த்தி, இலங்கை இயற்கை அனர்த்­தங்­களில் இருந்து பாடங்­களைக் கற்றுக் கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை. அனர்த்­தங்கள் ஏற்­ப­டு­கின்­ற­போது அதனைச் சமா­ளிப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். அதனை பின்­னர் மறந்து விடும் ஒரு சூழலே காணப்­ப­டு­கி­றது. இந்த விட­யத்தில் மக்­க­ளுக்கும் விழிப்­பு­ணர்வு இல்லை, சம்­பந்­தப்­பட்ட அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்கும் விழிப்­பு­ணர்வு இல்லை என்று குறிப்­பி­ட்டார்.  

‘தித்வா’  சூறா­வ­ளி­யினால் ஏற்­பட்ட பாதிப்­புகள் குறித்து உலக வங்கி மற்றும் ஐக்­கிய நாடுகள் அபி­வி­ருத்தித் திட்டம் வெளி­யிட்­டுள்ள பூர்­வாங்க அறிக்­கைகள் பேர­திர்ச்­சியைத் தந்­தன. உலக வங்­கியின் அறிக்­கை­யின்­படி இந்த அனர்த்­தத்­தினால் ஏற்­பட்ட நேரடி பௌதிகப் பாதிப்­பு­களின் பெறு­மதி சுமார் 4.1 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது இலங்­கையின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் 4 சத­வீ­த­மாகும்.  கண்டி, புத்­தளம் மற்றும் பதுளை ஆகிய மாவட்­டங்கள் மிக மோச­மான பாதிப்­பு­களைச் சந்­தித்­துள்­ளன. வீதிகள், பாலங்கள், மின்­சாரக் கட்­ட­மைப்­புகள் மற்றும் தொலைத்­தொ­டர்பு வச­திகள் என நாட்டின் பொதுக் கட்­ட­மைப்­புக்கு மட்டும் 1.735 பில்­லியன் டொலர் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் அபி­வி­ருத்தி திட்­டத்தின் மதிப்­பீட்டின்  பிர­காரம் விவ­சாயத் துறையைப் பொறுத்­த­வரை பேரி­டி­யாக அமைந்­தி­ருக்­கி­றது. இலங்­கையின் வேலை­வாய்ப்பில் 30 சத­வீ­தத்தை வழங்கும் இத்­துறை, சுமார் 814 மில்­லியன் டொலர் இழப்பைச் சந்­தித்­துள்­ளது. 5 இலட்­சத்து 30 ஆயிரம் ஹெக்­டேயர் நெற்­பயிர்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­யதால், நாட்டின் உணவுப் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.

சர்­வ­தேச தொழி­லாளர் அமைப்பின் தர­வு­க­ளின்­படி, சுமார் 374,000 தொழி­லா­ளர்கள் தற்­கா­லி­க­மா­கவோ அல்­லது நிரந்­த­ர­மா­கவோ தமது வாழ்­வா­தா­ரத்தை இழந்­துள்­ளனர். இது தனி­நபர் வரு­மா­னத்தில் மாத்­தி­ர­மன்றி, நாட்டின் பொரு­ளா­தார மீட்­சி­யிலும் நீண்­ட­காலத் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்.

இவ்­வாறு மிகப்­பெ­ரிய இழப்­புக்­களை இந்த அனர்த்தம் ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் உயி­ரி­ழப்­பு­களைத் தவிர்த்­தி­ருக்க முடி­யுமா என்ற கேள்வி இப்­போது பிர­தா­ன­மாக எழுப்­பப்­ப­டு­கி­றது. ‘தித்வா’ புயலின் போது ஏற்­பட்ட 800-க்கும் மேற்­பட்ட உயி­ரி­ழப்­பு­களில் (காணாமல் போன­வர்­க­ளையும் சேர்த்து) பெரும்­பா­லா­ன­வற்றைத் தவிர்த்­தி­ருக்க முடியும் என்­ப­துதான் உண்மை.

வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் முன்­கூட்­டியே எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தும், அந்தத் தக­வல்கள் உரிய நேரத்தில் அடி­மட்ட மக்­களைச் சென்­ற­டை­ய­வில்லை. தகவல் தொடர்புச் சங்­கி­லியில் ஏற்­பட்ட முறிவே இத்­தனை பெரிய உயிர்ச் சேதத்­திற்குக் கார­ண­மாக அமைந்­ததா என்ற கேள்வி எழு­கி­றது.  மக்­களைப் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு  முன்­கூட்­டியே அப்­பு­றப்­ப­டுத்­தி­யி­ருந்தால், பல நூறு குடும்­பங்கள் இன்று தமது உற­வு­களை இழந்­தி­ருக்­காது.

இது குறித்து சுட்­டிக்­காட்டும் கலா­நிதி கணே­ச­மூர்த்தி, உலகில் கால­நிலை மாற்­றத்தால் ஆபத்­து­மிக்க நாடு­களில் ஒன்­றாக இலங்கை உரு­வா­கி­ வ­ரு­கி­றது. வெள்­ளங்கள், மண்­ச­ரி­வுகள், பலத்த காற்று போன்­றவை தொடர்ந்து இடம்­பெ­று­கின்­றன. எனவே, அதற்­கேற்ற முறையில் இலங்கை தயா­ராக வேண்டும். அதற்­கான முன்­னெச்­ச­ரிக்­கைகள் மற்றும் அத்­தி­யா­வ­சிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். ஆனால் அதற்­கான தயார் நிலை இலங்­கை­யிடம் இருக்­கின்­றதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். முன்­ன­றி­விப்பு விட­யத்தில் சரி­யான தொழில்­நுட்ப ரீதி­யான முன்­னேற்­றமும் இலங்­கை­யிடம் இல்­லா­ம­லி­ருக்­கின்­றது. அந்த முன்­னேற்­றத்­தையும் இலங்கை ஏற்­ப­டுத்திக் கொண்­டால்தான் உயி­ரி­ழப்­புகள் ஏற்­ப­டு­வதை இனியாவது தடுக்க முடியும் என்று கூறு­கிறார்.  

இவ்­வி­ட­யத்தில் இந்­தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் சிறந்த முன்­மா­தி­ரி­க­ளாகத் திகழ்­கின்­றன. இந்­தி­யாவின் ஒடிசா மாநிலம் ஒரு காலத்தில் புயல்­களால் ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­களை இழந்­தது. ஆனால் இன்று, அங்­குள்ள 'பூச்­சிய உயி­ரி­ழப்பு' கொள்­கை­யினால், ஒரு மில்­லியன் மக்­களை வெறும் 36 மணி­ நே­ரத்தில் அப்­பு­றப்­ப­டுத்தும் திறன் அவர்­க­ளுக்கு உள்­ளது. அதே­போன்று, ஜப்­பானில் நில­ந­டுக்­கமும் சுனா­மியும் அடிக்­கடி ஏற்­பட்­டாலும், அங்­குள்ள அதி­ந­வீன முன்­னெச்­­ச­ரிக்கை பொறி­முறை மற்றும் மக்­களின் தயார்­நிலை கார­ண­மாக உயி­ரி­ழப்­புகள் மிகக் குறை­வா­கவே இருக்­கின்­றன. இத்­த­கைய நாடு­க­ளி­ட­மி­ருந்து இலங்­கையும் தொழில்­நுட்ப மற்றும் முகா­மைத்­துவப் பாடங்­களைக் கற்க வேண்டும்.

மத்­திய மலை­நாட்டுப் பகு­தி­களில் ஏற்­பட்ட மண்­ச­ரி­வுகள் மனிதத் தவ­று­க­ளையும் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. தேசிய கட்­ட­ட­வியல் ஆராய்ச்சி நிறு­வ­னத்தின் அங்­கீ­காரம் இன்றி ஆபத்­தான சரி­வு­களில் வீடுகள் அமைக்­கப்­ப­டு­வதும், முறை­யற்ற குடி­யேற்­றங்­க­ளுமே அதிக உயி­ரி­ழப்­பு­க­ளுக்குக் கார­ண­மா­கின்­றன. காட­ழிப்பு மற்றும் முறை­யற்ற நிலப்­ப­யன்­பாடு கார­ண­மாக மண்ணின் உறு­தித்­தன்மை குறைந்து, சிறிய மழைக்கே நிலச்­ச­ரி­வுகள் ஏற்­படும் அபாயம் அதி­க­ரித்­துள்­ளது.

"இந்தக் கால­நிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்­தங்­களால் மலை­யக மக்களே பெருமளவில்  பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். மண்­சரிவு, வெள்ளம் போன்­றவை அங்கு இடம்­பெ­று­கின்­றன. ஆனால் இன்றும் கூட வாழ்­வ­தற்கு ஆபத்­தான பகு­தி­களில் உள்ள வீடு­களில் மலை­யக மக்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்­களைப் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அகற்­று­வ­தற்­கான திட்­டங்கள் எதுவும் இல்லை. அனர்த்­தங்கள் ஏற்­ப­டும்­போது அவர்கள் அங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்து பொது இடங்­களில், பாட­சா­லை­களில் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். பின்னர் பழைய இடத்­திற்கே சென்று விடு­கி­றார்கள்.

எனவே, இந்த ஆபத்­தான பகு­தி­களில் இருக்­கின்ற மக்­களை அடை­யாளம் கண்டு அவர்­களைப் பாது­காப்­பான இடங்­களில் குடி­யேற்ற வேண்டும். இந்த விட­யத்தில் பொது­மக்கள், அர­சாங்கம் எனச் சகல தரப்­பி­ன­ருக்கும் பாரிய பொறுப்­பு­ணர்வு இருக்­கின்­றது என்­பதை உணர்ந்து கொள்ள வேண்டும்’’ என்றும்   கலா­நிதி கணே­ச­மூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, எதிர்­கா­லத்தில் மலை­ய­கத்தில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற கட்­டு­மா­னங்­களில் கடு­மை­யான விதி­மு­றை­களைப் பின்­பற்­று­வதும், ஆபத்­தான பகு­தி­களில் வசிக்கும் மக்­களைப் பாது­காப்­பான இடங்­க­ளில் மீள்­கு­டி­யேற்­று­வதும் காலத்தின் கட்­டா­ய­மாகும்.

கால­நிலை மாற்றம் என்­பது இனி­வரும் காலங்­களில் ஒரு நிரந்­தர அச்­சு­றுத்­த­லாக இருக்­கப்­போ­கி­றது. இலங்கை உல­க­ளா­விய கார்பன் வெளி­யேற்­றத்தில் மிகக் குறைந்த பங்­க­ளிப்­பையே (1.2%) செய்­தாலும், அதன் பாதிப்­பு­களை அதி­க­மாகச் சுமக்கும் நாடு­களில் ஒன்­றாக உள்­ளது.

எதிர்­பா­ராத நேரங்­களில் பெய்யும் அதீத மழை மற்றும் நீண்­ட­கால வறட்சி என கால­நிலை மாற்­றத்தின் கோர முகத்தை நாம்  தொடர்ந்து சந்­தித்து வரு­கிறோம். எனவே, இதனை ஒரு சாதா­ரண அனர்த்­த­மாகப் பார்க்­காமல், தேசியப் பாது­காப்பு பிரச்­சி­னை­யாகக் கருதி, நீண்­ட­காலத் திட்­ட­மி­டல்­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்க வேண்டும்.

அனர்த்த முகா­மைத்­து­வத்­துக்­காக அர­சாங்கம் ஒதுக்கும் நிதியை ஒரு செல­வாகப் பார்க்­காமல், அது மக்­களைப் பாது­காப்­ப­தற்­கான ஒரு 'முத­லீ­டாகப்' பார்ப்­பது அவ­சி­ய­மாகும். ஒவ்­வொரு பிர­தே­சத்­திலும் முறை­யான தற்­கா­லிக முகாம்கள், குடிநீர் மற்றும் சுகா­தார வச­தி­க­ளுடன் கூடிய பாது­காப்பு நிலை­யங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும். குறிப்­பாக, பெண்கள் மற்றும் குழந்­தை­களின் பாது­காப்பு இத்­த­கைய சூழல்­களில் உறுதி செய்­யப்­ப­டு­வது தீர்க்­க­மா­ன­தாகும்.    

இலங்­கையின் மீட்­சிக்கு சர்­வ­தேச நாடு­களின் உதவி தற்­போது மிக அவ­சி­ய­மான ஒன்­றாக உள்­ளது.  இலங்கை சர்­வ­தேச உதவி வழங்கும் மாநாட்­டையும் நடத்­த­­வுள்­ளது.  எனினும், வெளி­­நாட்டு உதவிகளில்  மட்டும் தங்கி­யிருக்காமல், உள்நாட்­டில் அனர்த்­தங்களை எதிர­்­­கொள்­ளும் 'முன்னெச்சரிக்கை பொறி­முறையை' (Early Warning System) வலுப்படுத்துவதே எதிர்கால அனர்த்­தங்க­ளி­லிருந்து மக்கள் தம்மை பாது­காத்துக்­கொள்­வதற்கான நிலையான தீர்வாகும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்­படுத்தி ஒவ்வொரு குடிமகனின் கைபேசிக்கும் எச்சரிக்கை செய்திகள் சென்றடைவதை உறுதி செய்வது தீர்க்கமான ஒன்றாக அமையும்.

அனர்த்தங்களின்போது "தயார்நிலை என்பது ஒரு தெரிவு அல்ல, அது உயிர்வாழ்வதற்கான அவசியம்" என்பதே  ‘தித்வா’ சூறாவளி எமக்கு உணர்த்திய முக்கியமான பாடமாகும்.    இயற்கை அனர்த்தங்களைத் தடுத்து நிறுத்த மனிதனால் முடியாது, ஆனால்  தொழில்நுட்ப வளர்ச்சியையும்  முறையான திட்டமிடலையும் கொண்டு அதன் பாதிப்புகளைப் பெரு­மளவு குறைக்க முடியும். கடந்தகாலத் தவறுக­ளிலிருந்து பாடம் கற்று, அரசாங்கம், நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, எதிர்காலச் சீற்றங்களிலிருந்து இலங்கையையும் இலங்கை மக்களையும் பாதுகாக்க முடியும்.

நன்றி virakesari

 

வர்த்தக‌ விளம்பரங்கள்