Paristamil Navigation Paristamil advert login

தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது தாக்குதல் - 40 மாணவிகள் பலி

தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது தாக்குதல் - 40 மாணவிகள் பலி

28 மாசி 2026 சனி 14:14 | பார்வைகள் : 286


தெற்கு ஈரானின் மினாப் (Minab) நகரில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 40 மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன், 48 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, 24 மாணவிகள் உயிரிழந்ததாகவும் 45 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மினாப் நகர ஆளுநர், ஈரானிய செய்தி நிறுவனம் Mehr-க்கு வழங்கிய தகவலில்,

மினாப் நகரில் இன்று இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு ஆரம்பப் பாடசாலை இலக்கு வைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

‘ஷஜாரே தய்யிபே (Shajare Tayyebe)’ எனப்படும் பாடசாலை வளாகம் மீண்டும் தாக்கப்பட்டதாகவும், அந்தப் பாடசாலைக்கு அருகில் அமைந்திருந்த ஒரு மருத்துவமனையும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவமனை, தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கு முதலுதவி வழங்கும் மையமாக செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான பாடசாலையில், காலை நேர அமர்வில் மொத்தம் 170 மாணவிகள் கல்வி பயின்று வந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற போது வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இடிபாடுகளை அகற்றும் பணிகள் மற்றும் காயமடைந்த மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சம்பவத்திற்குப் பின்னர் உருவான கோரக் காட்சிகளை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தாங்கள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் இராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைப்பதாகக் கூறி வரும் நிலையில், ஒரு ஆரம்பப் பாடசாலை சேதமடைந்துள்ளமை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல மனித உரிமை அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளன.