Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்!

22 மாசி 2026 ஞாயிறு 10:14 | பார்வைகள் : 1841


ஆப்கானிஸ்தானின் கானி கெலோ மற்றும் கார்டா சாமியா ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான் விமானப்படை இன்று ஞாயிற்றுக்கிழமை 22.02.2026 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக ஆப்கானிய வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன.

இந்தத் தாக்குதலில் குறைந்தது சுமார் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானுக்குள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குழுக்களே காரணம் என பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.

இதன் தொடர்ச்சியாகவே இந்த 'உளவுத்துறை அடிப்படையிலான' தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நீடித்து வரும் எல்லை மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மை மீறப்படுவது குறித்து ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.