Paristamil Navigation Paristamil advert login

அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீதம் வரி - டிரம்ப் அதிரடி அறிவிப்பு

அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீதம் வரி - டிரம்ப் அதிரடி அறிவிப்பு

22 மாசி 2026 ஞாயிறு 10:09 | பார்வைகள் : 179


அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீத உலகளாவிய வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியா, சீனா உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்திருந்த அமெரிக்கா, அதற்கு எதிராக பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாக கூறி இந்த நடவடிக்கையை எதிர்த்திருந்தன.

இதற்காக 1977 ஆம் ஆண்டின் அமெரிக்க அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.

எனினும், இந்த வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Supreme Court of the United States இன் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்த நிலையில், பெரும்பான்மை தீர்ப்பில் டிரம்ப் விதித்த வரி நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கப்பட்டது.

நீதிபதிகளின் தீர்ப்பில், வரி விதிக்கும் அதிகாரம் United States Congress க்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாகத்துக்கு அத்தகைய அதிகாரம் அரசமைப்பு வழங்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது. இதனால் டிரம்ப் விதித்த முந்தைய வரி நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிருப்தி அடைந்த டிரம்ப் நிர்வாகம், புதிய பொருளாதார நடவடிக்கையாக உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத தற்காலிக வரியை அறிவித்துள்ளது.

அரசியலமைப்பு சட்டம் 122 பிரிவின் கீழ் இந்த வரி விதிக்கப்படுவதாகவும், United States உடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளும் 150 நாட்கள் வரை இந்த வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட கனிம வளங்கள், இயற்கை வளங்கள், உரங்கள், ஒரேஞ்சு, மாட்டிறைச்சி, மருந்துப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் சில வாகனங்கள் ஆகியவற்றுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக விதிக்கப்பட்ட வரிகள் இரத்து செய்யப்படாது என்றும், அவை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுக்கு எதிராக நியாயமற்ற வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த புதிய வரி உத்தரவு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. வர்த்தக பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இறுதி வரி விகிதங்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகளும், ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்கு மாற்றாக தற்போது புதிய 10 சதவீத வரியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த தற்காலிக வரி நடவடிக்கை 150 நாட்கள் வரை அமுலில் இருக்கும் என்றும், அதன் பின்னர் வரியை தொடர வேண்டுமானால் United States Congress இன் ஒப்புதல் அவசியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு சர்வதேச வர்த்தக சந்தையில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல நாடுகள் அமெரிக்காவின் வரிக் கொள்கையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்