ஆட்சியல்ல; பதவியல்ல; உயிரே போனாலும் கவலைப்பட மாட்டோம்! முதல்வர் ஸ்டாலின்
22 மாசி 2026 ஞாயிறு 05:24 | பார்வைகள் : 182
ஆட்சியல்ல, பதவியல்ல, உயிரே போனாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். மீறிப்போனால் வழக்கு போடுவார்கள். போடுங்க, நாங்க பார்க்காத மிசாவா? தடாவா,'' என்று மதுரையில் நடந்த தென் மண்டல திமுக பாக முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மதுரையில் நடந்த திமுக தென்மண்டல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் மூர்த்தி செங்கோல் வழங்கினார்.
தொடர்ந்து கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது;
கடந்த பார்லி தேர்லின் போதே பூத் அளவிலான நிர்வாகிகளை நியமிக்கத் தொடங்கி விட்டோம். தேர்தலுக்கான களப்பணியின் போது, பிஎல்ஏ 2க்களுக்கான பயிற்சிகளை நானே சென்று நடத்தினேன். அதனால் தான் 40க்கு 40 என்று வெற்றி பெற்றோம். எஸ்ஐஆர் மூலம் இந்தியா முழுதும் பல மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். ஆனால், நமது தமிழகத்தில் யாருடைய வாக்குகளும் நீக்கப்படாமல் பம்பரமாக உழைத்தது நமது திமுக தான்.
சென்னை, திருப்பத்தூருக்கு அடுத்ததாக மதுரையில் நடக்கும் இந்த மாநாட்டில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளீர்கள். 27ம் தேதி கோவையில் மேற்கு மண்டல மாநாடு நடக்க இருக்கிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 7 மாநாடு நடத்தப்பட்டுள்ளது. 9 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நான் சந்தித்து பேசியுள்ளேன். சவால் விட்டு சொல்கிறேன், பூத் அளவில் தேர்தலுக்கு ஆயத்தமாகும் கட்சி திமுகவைத் தவிர, இந்தியாவிலேயே எங்கும் காண முடியாது.
டிரெய்லர் தான்
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம், நாம் எல்லாம் அண்ணா, ஈவேரா, கருணாநிதியின் ரத்தம். அதனால் தான் நம் இயக்கத்தை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே, தமிழகமே பதிலடி கொடுக்கும் என்ற பயம். எதிரிகளை அஞ்சி நடுங்க வைக்கிறது. திமுக போன்ற வலுவான அரசியல் கட்சியை யாராலும் காட்ட முடியாது. இப்போது, காட்டுவது எல்லாம் வெறும் டிரெய்லர் தான்.
திருச்சியில் மெயின் பிக்சர் காட்டுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். மார்ச் 9ம் தேதி திருச்சியில் திமுக நிர்வாகிகள் கூடப் போகிறோம். 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாநாட்டை தமிழகமே பார்க்கப் போகிறது. நாம் ரெக்கார்டு பண்ணினால், அதை யாராலும் முறியடிக்க முடியாத ரெக்கார்டாக இருக்க வேண்டும்.
கேள்வி கேட்கணும்
2019ல் இருந்து அனைத்து தேர்தல்களிலும் நமது கூட்டணிக்கு வெற்றி மேல் வெற்றி தான். மக்கள் கேட்டதையும் செய்து கொடுத்திருக்கிறோம், நிறைய சர்ப்ரைஸ் திட்டங்களையும் கொடுத்திருக்கிறோம். தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம் என்பதில் சந்தேகம் இல்லை. 200 தொகுதிகள் நிச்சயம், 200க்கும் கூடுதலான தொகுதிகள் தான் லட்சியம்.
பிரதமர் மோடி பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அதில், இலவச பஸ் திட்டத்தினால், மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததாகக் கூறினார். பிரதமர் மார்ச் 1ம் தேதி மதுரைக்கு வர இருக்கிறார்.
அப்போது, மெட்ரோவுக்காக கவலைப்படும் நீங்கள், மதுரை, கோவைக்கு ஏன் மெட்ரோ சேவை வழங்கவில்லை என்று பிரதமரிடம் மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
டெபாசிட் இழக்கணும்
எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கோரிக்கையாக கூட இதை எல்லாம் கேட்க துணிச்சல் இல்லாத துரோகி ஆகிவிட்டார். நான் இபிஎஸ் போன்ற பயந்தவன் இல்லை.
ஆட்சியல்ல, பதவியல்ல, உயிரே போனாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். மீறிப்போனால் வழக்கு போடுவார்கள். போடுங்க, நாங்க பார்க்காத மிசாவா? தடாவா?. இன்று இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகளில் திமுக நிர்வாகிகள் வீடுகளில் தான் ரெய்டுகள் அதிகமாக நடத்தினார்கள். என்ன ஆனாலும் சரி, எழுந்து நிற்போம், ஒரு கை பார்ப்போம்.
நாம் ஆட்சிக்கு வந்து 1752 நாட்கள் ஆகிவிட்டது. இதில், நாம் சாதனை பண்ணாத நாட்களே கிடையாது. கூட்டணியில் புதிய கட்சிகள் எல்லாம் இணைகிறது. தொகுதி பங்கீடுக்கு குழு அமைத்து விட்டோம். தமிழக அணியா? டில்லி அணியா? என்ற கேள்வியை மக்களிடம் எழுப்புங்கள். அதிமுக, பாஜ அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வேண்டும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும், இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக, மதுரையில் இன்று (பிப்.,21) முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அரசு திட்டங்களை துவக்கி வைத்தார். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வைகை ஆற்றின் குறுக்கே தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான கோரிப்பாளையம் மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
மதுரையில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மறவோம் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது; இன்று காலையில் இருந்து 5,6 அரசு நிகழ்ச்சிகிள், மாலையில் திமுக பாக முகவர்களின் மாநாட்டைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். சகோதரர் கமல்ஹாசனின் அழைப்பை மறுக்க முடியுமா? கமல் தனது படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார். 'மறதி ஒரு தேசிய வியாதி' என்று. அதுபோல காந்தியை மக்கள் மறந்து விடக் கூடாது என்று தான், காந்தியின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய மதுரை மண்ணில், 'மறவோம்' என்ற நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
காந்தி என்றதும் அரையாடை அணிந்து எளிமையோடு இருக்கும் தோற்றம் தான் அனைவரின் மனதிலும் எழும். அப்படி, அவர் அரையாடைக்கு மாறிய மண் தான் இந்த மதுரை. திராவிட மாடல் ஆட்சியில் காந்தி அருங்காட்சியகத்தை ரூ.10 கோடி செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்தியாவில் காந்திக்காக அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் இதுதான். காந்தி சுடப்படும் போது, ரத்தக்கறை படிந்த அவரது வேட்டி, இங்கு தான் இருக்கிறது. அவர் பயன்படுத்திய பொருட்கள் இங்கு இருக்கிறது.
வெறுப்பு அரசியலை மூர்க்கமாக திணிக்கும் ஒரு கட்சி மத்தியில் ஆளும் காலத்தில், காந்தியத்தை நம்நாடு இறுகப் பற்றிக் கொள்ள வேண்டி வலியுறுத்தும் நிகழ்வுதான் இது. காந்தியை மக்கள் மனதில் இருந்து எப்படியாவது அகற்ற வேண்டும் என்று மத்திய பாஜ அரசு திட்டமிட்டு துடித்துக் கொண்டிருக்கிறது. காந்திய கொள்கைகளை அழிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து, காந்தி என்ற பெயரே இருக்கக் கூடாது என்ற இடத்திற்கு அவர்கள் நகர்ந்திருக்கிறார்.
அதற்கு உதாரணம் தான், 100 நாள் வேலைத்திட்டத்தில் இருந்து காந்தி பெயரை நீக்கியது. அடுத்து ரூபாய் நோட்டில் இருந்து காந்தியின் படத்தை நீக்கினாலும் நீக்கி விடுவார்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒற்றைத்துவத்திற்கு எதிரானவர் காந்தி. ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி. மதநல்லிணக்கத்திற்கான மகத்தான மந்திரம் காந்தி. இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கருத்தியல் தான் காந்தி. இதனால், தான் மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்களுக்கு காந்தியை பிடிப்பதில்லை.
சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். மாற்றுத்திறனாளி என்றுகூட பார்க்காமல் சிறுமியை தாக்குகிறார்கள். தமிழகத்திலும் இதுபோன்ற தாக்குதலை நடத்த வேண்டும் என்று வெறி பிடித்து அழைகிறார்கள். இதனை நம் அரசு நடக்க விடாது.
மனிதத்தையும், மனிதர்களையும் அழித்து ஆட்சியைப் பிடிக்கும் பாஜவின் பிடியில் தமிழகம் சிக்கி விடக் கூடாது. இந்தத் தேர்தல் தமிழகம் Vs என்டிஏ தான். அதில், தமிழகம் வெல்லும். பாஜ வெறுப்பு இன்ஜின்கள் தமிழகத்திற்கு தேவையே இல்லை.
கமல் பேசுவது எங்களுக்கு புரியவில்லை என்று சொல்லுவார்கள். அவர்களுக்கு புரியாமல் இல்லை, புரிந்து கொள்ளக் கூடாது என்று இருக்கிறார்கள். மீடியா மைக் முன்பு புலம்பிட்டு இருந்தவர்கள், இப்போது பார்லி மைக்கிலும் கமல் தற்போது புலம்ப வைத்து விட்டார். அதுக்காக பாராட்டுக்கள், இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan