தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்காக கேள்வி!
20 மாசி 2026 வெள்ளி 09:27 | பார்வைகள் : 188
தேர்தல் சமயத்தில் இலவச திட்டத்தை அறிவித்து தாராளமாக செலவு செய்வதும், வளர்ச்சிக்காக மக்கள் வரிப்பணத்தை செலவிடாமல் கஜானாவை காலி செய்வதும் என்ன கலாசாரம்? என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இலவச மின்சார திட்டத்திற்கான நிதி எங்கு இருந்து வருகிறது என்பதை விளக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு, மின்வாரிய திருத்த விதிகள் 23-ஐ கடந்த 2024ல் கொண்டு வந்தது. இந்த விதியின்படி மின்வாரியத்தின் ஆண்டு வருவாய் தேவைக்கும், வசூலாகும் வருவாய்க்கும் இடையே எந்த இடைவெளியும் இருக்கக் கூடாது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்க உள்ள சூழலில், அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்க தி.மு.க., அரசு முடிவு செய்தது.
மின்சார திருத்த விதிகள் 23ன்படி, தமிழக அரசு இலவச திட்டத்தை செயல்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'இந்த சட்ட திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது; செயல்படுத்த முடியாதது' என குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நாடு முழுதும் என்ன மாதிரியான கலாசாரத்தை நாம் உருவாக்கி வருகிறோம். காலையில் இலவச உணவு வழங்குகிறீர்கள். அதன்பின் இலவச சைக்கிள். தற்போது இலவச மின்சாரம். இது, எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணப் பட்டுவாடா.
நலத்திட்டங்களுக்காக அரசு செலவிடுவது நியாயமானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதிலும் ஏழைகளுக்காக செலவிடுவதில் தவறு இல்லை. ஆனால், பணம் செலுத்தி மின்சாரத்தை வாங்கும் திறன் படைத்த பணக்காரர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதை எப்படி ஏற்க முடியும்.
நம் நாட்டில், கல்வியை தொடர முடியாத நிலையில் நிறைய ஏழை குழந்தைகள் இருக்கின்றனர். அதற்காக ஒரு மாநில அரசு செலவிடலாம். அது அரசின் கடமையும் கூட. ஆனால், இலவசம் என்ற பெயரில் பணக்காரர்களுக்கும் அரசு செலவிடலாமா?
இப்படியான மோசமான கொள்கையை மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். வருவாய் உபரி கொண்ட மாநிலமாக இருந்தாலும், செலவிடுவதற்கு என ஒரு வரைமுறை இருக்கிறது.
ஒட்டுமொத்த மக்களுக்கான வளர்ச்சி திட்டத்திற்காக செலவிட அனுமதி கோரினால் சரியாக இருக்கும். ஆனால், அதற்கு மாறாக, வெறும் இலவச திட்டங்களுக்காக செலவிட அனுமதி கேட்பது எப்படி நியாயமாகும்.
உள்கட்டமைப்பு, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் கட்டுவதற்காக மக்களின் வரிப்பணத்தை தாராளமாக செலவிடலாம். அதை விடுத்து, தேர்தல் சமயத்தில், அதிலும் கடைசி நிமிடத்தில் ஒரு இலவச திட்டத்தை அறிவித்து, அதற்காக தாராளமாக செலவிட அனுமதி கோருவதை எப்படி ஏற்பது. இப்படி செலவு செய்தால், கஜானாவில் ஒரு ரூபாய் கூட மிச்சம் இருக்காது. எல்லாமே காலியாகிவிடும்.
இந்த பிரச்னை தமிழகத்தில் மட்டும் இல்லை. அனைத்து மாநிலங்களிலும் நீடிக்கிறது. திட்டமிட்ட மற்றும் திட்டமிடாத செலவினங்கள் மீது அரசு கவனமாக இருக்க வேண்டும்.
இலவச திட்டங்களை வழங்க விரும்பினால், அதற்கான நிதி ஒதுக்கீட்டை பட்ஜெட்டில் சேர்த்து விடுங்கள். அப்போது தான் செலவிடும் தொகை எவ்வளவு என்ற கணக்கு தெரியும். அதை விடுத்து திடீரென ஒரு கொள்கையை முடிவு செய்து, அதற்காக நிதியை தாராளமாக செலவிடுவது வளர்ச்சி திட்டங்களை வெகுவாக பாதிக்கும். காலை முதல் மாலை வரை இலவசங்களை வாரி வழங்கிக் கொண்டே இருந்தால், பணி கலாசாரம் என்னவாகும்.
சம்பளம் வழங்குவது, இலவசங்களுக்காக பணத்தை வாரி இறைப்பது என இரண்டு வேலைகளை மட்டுமே அரசு செய்யக்கூடாது.
இலவச திட்டங்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட முடியாத சூழல் உருவாகும். எனவே, தற்போதைய இலவச திட்டங்களுக்கான நிதி அரசுக்கு எங்கு இருந்து வருகிறது.
எதை வைத்து இலவச மின்சாரம் என்ற வாக்குறுதியை கொடுத்தீர்கள். இது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக அரசும், மத்திய அரசும் இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan