Paristamil Navigation Paristamil advert login

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் வழக்கு - ஐநா கடும் எச்சரிக்கை

 பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் வழக்கு -   ஐநா கடும் எச்சரிக்கை

18 மாசி 2026 புதன் 07:08 | பார்வைகள் : 198


பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான இலட்சக்கணக்கான ஆவணங்கள், ஒரு உலகளாவிய குற்றவியல் நிறுவனத்தின் இருப்பைச் சுட்டிக்காட்டுவதாக ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் இழிவுபடுத்தப்பட்ட விதம், சட்டப்படி மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற வரம்பிற்குள் வரக்கூடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட சுதந்திரமான நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், எப்ஸ்டீன் விவகாரத்தில் நிகழ்ந்துள்ள அநீதிகள் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களின் அடிப்படையில், இந்தச் செயல்கள் இனவாதம், ஊழல் மற்றும் தீவிரமான பெண் வெறுப்பு ஆகியவற்றின் பின்னணியில் அரங்கேறியுள்ளன.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களின் மூலம் 1,200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசியல், நிதி, கல்வி மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த பல முக்கியப் புள்ளிகளுடன் எப்ஸ்டீனுக்கு இருந்த நெருக்கமான தொடர்புகளை இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இவ்வளவு காலமாகக் குற்றங்கள் தொடர எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தகவல்களை முழுமையாக வெளியிடத் தயங்குவதும், ஆவணங்களில் உள்ள விவரங்களைச் சரியாக மறைக்கத் தவறியதும் தங்களை மீண்டும் பாதிப்புக்குள்ளாக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிப்பதாக ஐநா நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்