உலகின் மிக மாசடைந்த 10 சமுத்திர வலயங்களுக்குள் இலங்கை
16 மாசி 2026 திங்கள் 18:20 | பார்வைகள் : 162
நாரா நிறுவனமானது வெறும் பாரம்பரிய ஆராய்ச்சிகளுடன் மட்டுப்படுத்தப்படாது, புத்தாக்கங்களை நோக்கிச் செல்ல வேண்டும். மேலோட்டமாகத் தெரிவது யதார்த்தம் அல்ல. விஞ்ஞானம் என்பது இயல்பை ஆழமாக ஆராய்வதாகும் என பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
இந்நாட்டின் கடற்றொழில் மற்றும் சமுத்திர வளங்கள் துறையின் விஞ்ஞான ஆராய்ச்சி மையமான தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்தை (NARA) பலப்படுத்தும் நோக்கில், 85 புதிய அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (16) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் நாரா நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பின் கீழ் முதன்மை விஞ்ஞானி (Principal Scientist), சிரேஷ்ட விஞ்ஞானி (Senior Scientist) மற்றும் விஞ்ஞானி (Scientist) ஆகிய பதவிகளுக்கு 45 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டமை விசேட அம்சமாகும். இவர்களுக்கு மேலதிகமாக சிரேஷ்ட நீரியல் அளவையாளர் (Senior Hydrological Surveyor), நீர் வரைபட அளவையாளர் (Hydrographic Surveyor), சிரேஷ்ட விரிவாக்கல் அதிகாரி, உதவிப் பணிப்பாளர் (மனித வளம்), சமூகவியலாளர், பொருளியலாளர், களஞ்சியசாலைக் காப்பாளர், நூலகர், பணிப்பாளர் நாயகத்தின் பிரத்தியேக உதவியாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் (இயந்திரவியல்), கணினி வலையமைப்பு/ வன்பொருள் தொழில்நுட்ப உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் (திட்டம்), ஆராய்ச்சி உதவியாளர், முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம் சாராத) மற்றும் மின்சாரத் தொழில்நுட்பவியலாளர் ஆகிய பதவிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன.
புதிய நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இன்று நியமனம் பெறுபவர்களில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேர் விஞ்ஞானிகள். 'விஞ்ஞானி' என்ற பெயரைக் கேட்டவுடனேயே எமக்கு ஒரு கௌரவம் ஏற்படுகின்றது.
அந்தப் பெயருக்குத் தகுந்த சேவையைச் செய்ய நீங்கள் தயாரா என உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுக்கொள்ளுங்கள். நாரா நிறுவனமே இந்நாட்டின் கடல் வளங்களின் உரிமையாளராகும். இந்நிறுவனத்தை முறையாக முகாமைத்துவம் செய்தால், நாட்டிற்கு பாரிய வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு இடமாக இதனை மாற்ற முடியும்.
கடந்த காலங்களில் அரச தொழில் வழங்கலின் போது அரசியல்வாதிகளின் தலையீடுகள் அதிகம் காணப்பட்ட போதிலும், இமுறை நாரா நிறுவனத்திற்கான ஆட்சேர்ப்பு எவ்வித அரசியல் செல்வாக்குமின்றி, முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசியல்வாதிகளின் வாகன அனுமதிப்பத்திரங்கள், உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளைக் குறைத்து முன்னுதாரணமான அரசியல் கலாசாரமொன்றை உருவாக்க எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மக்களுக்கு இல்லாத ஓய்வூதியம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அநாவசியமானது என்ற கொள்கையிலிருந்து, நாளைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, நாரா நிறுவனமானது வெறும் பாரம்பரிய ஆராய்ச்சிகளுடன் மட்டுப்படுத்தப்படாது, புத்தாக்கங்களை நோக்கிச் செல்ல வேண்டும். மேலோட்டமாகத் தெரிவது யதார்த்தம் அல்ல. விஞ்ஞானம் என்பது இயல்பை ஆழமாக ஆராய்வதாகும்.
நாம் கடற்றொழில் துறையை பாரம்பரிய கட்டமைப்புக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும். எண்ணெய் அகழ்வு, சமுத்திர கனியவள அகழ்வு மற்றும் கடல் உணவு (Sea Food) சார்ந்த புதிய உற்பத்திகள் குறித்து நாரா நிறுவனம் கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.
உலகின் மிக மாசடைந்த 10 சமுத்திர வலயங்களுக்குள் இலங்கையும் அடங்குகின்றது. இந்நிலையை மாற்றி, எமது அழகிய கடற்கரையையும் சமுத்திர வலயத்தையும் பாதுகாப்பதற்கு மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, அது சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் உங்கள் பொறுப்பாகும்.
நாம் தாமதிக்கவில்லை, இப்போது மலை உச்சி நோக்கிப் பறக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. என்பதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச மற்றும் நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan