Paristamil Navigation Paristamil advert login

ஈரான் தொடர்பில் சீனாவிற்கு நெருக்கடி - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா திட்டம்

 ஈரான் தொடர்பில் சீனாவிற்கு நெருக்கடி -  இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா திட்டம்

15 மாசி 2026 ஞாயிறு 11:22 | பார்வைகள் : 296


சீனாவிற்கான ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைக் குறைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்று டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதன்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்திலேயே இருவரும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

ஈரானுக்கு எதிராக இந்த விவகாரத்தில் அதிகபட்ச அழுத்தத்துடன் முழு பலத்துடன் செல்வோம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம் என மூத்த அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளதாக Axios செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக சீனாவிற்கு ஈரானிய எண்ணெய் விற்பனை தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சீனாவில் லூனார் புத்தாண்டு விடுமுறையின் முதல் நாள் என்பதால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து பதில் ஏதும் வெளியாகவில்லை.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை சீனாவிற்கு முன்னெடுக்கப்படுகிறது.

இந்த வர்த்தகத்தில் ஏதேனும் சரிவு ஏற்பட்டால் அது ஈரானை வெகுவாக பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, உறவுகளைப் புதுப்பிக்கும் முயற்சியில், அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் கடந்த வாரம் ஓமானில் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஈரான் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது சக்திவாய்ந்த போர் கப்பல்களை தயார் நிலையில் நிறுத்தியதன் பின்னரே, பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டது.

மட்டுமின்றி, ஈரானுக்கு எதிராக வாரக்கணக்கில் நீடிக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு என அமெரிக்க இராணுவம் தயாராகி வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆனால், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அது வளைகுடாவையே மிக மோசமான நிலைக்கு தள்ளும் போராக மாறக் கூடும் என்ற அச்சமும் அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகள் போன்ற நெருக்கடிகளால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் விலைவாசி உயர்வுக்கு காரணமும் மேற்கத்திய நாடுகள் அளிக்கும் நெருக்கடியே என ஈரான் அரசாங்கம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அணு சக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் மட்டுமே ஈரான் தரப்பில் முன்னெடுக்கப்படும் என்றும், இஸ்ரேலின் திட்டங்களை அமெரிக்கா முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படாது என்றும் ஈரான் தரப்பில் அறிவித்துள்ளதாகவே கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்