Paristamil Navigation Paristamil advert login

தமிழர்களின் மொழிப்பற்றும், இனப்பற்றும் ஒருபோதும் இனவெறியாக மாறாது! ஸ்டாலின்

தமிழர்களின் மொழிப்பற்றும், இனப்பற்றும் ஒருபோதும் இனவெறியாக மாறாது! ஸ்டாலின்

13 தை 2026 செவ்வாய் 10:45 | பார்வைகள் : 112


மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் விழாவில் தமிழர்கள் இனவெறி இல்லாதவர்கள் என்றும், கீழடி அகழாய்வுகள் மூலம் கற்பனைவாதிகள் அல்ல என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழர்களின் மொழிப்பற்றும், இனப்பற்றும் ஒருபோதும் இனவெறியாக மாறாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் கூறியுள்ளார். மேலும், தமிழர்கள் கற்பனைவாதிகள் இல்லை என்பதை அகழாய்வுகள் மூலம் நிரூபித்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அயலகத் தமிழர் நலத்துறை சார்பில், தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம் எனும் தலைப்பில் அயலகத் தமிழர் நாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர்களின் இனப்பற்று ஒருபோதும் இனவெறியாக மாறாது என கூறினார். தமிழ்நாட்டில் கீழடி, சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுகளில் கிடைத்த பொருட்கள், தமிழர்கள் கற்பனைவாதிகள் இல்லை என்பதை நிரூபித்திருப்பதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாக, ஆஸ்திரேலியா வாழ் தமிழரும், பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்ட தலைவருமான அண்ணாமலை மகிழ்நனுக்கு சான்றிதழ் மற்றும் 10 லட்சம் ரூபாய் காசோலையுடன் கூடிய தமிழ் மாமணி விருது வழங்கி முதலமைச்சர் பெருமைப்படுத்தினார்.

இதேபோல, கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வணிகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அயலக தமிழர்களுக்கு 18கிராம் தங்க பதக்கத்துடன் கூடிய கணியன் பூங்குன்றனார் விருதுகளையும் வழங்கினார். எத்தனை விருதுகளை பெற்றாலும் தாய்நாட்டில் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக விருதாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் சிறந்த பண்பாட்டு தூதுவர் விருதை பர்மா வாழ் தமிழரான தீபா ராணி பெற்றார். அண்மையில் தொடங்கப்பட்ட ‘உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தின்படி, முதலமைச்சரிடம் நேரடியாக தங்களது கனவை பகிர்ந்தது மகிழ்ச்சி அளித்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சாரா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், அயலகத் தமிழ்க் குழுந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் தமிழ் மனம் திட்டத்தின் கீழ் 10 தமிழாசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்