நாளை மத்திய பட்ஜெட் - தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
31 தை 2026 சனி 09:05 | பார்வைகள் : 704
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ந்தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையில், விமான விபத்தில் உயிரிழந்த, மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொண்டார்.
இந்நிலையில், மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த விவாதம் பிப்ரவரி 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி காலை 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை(நாளை) வருகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலங்களும், பங்கு சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி அன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி தினமாகும். இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், மத்திய பட்ஜெட் திட்டமிட்டபடி நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட் இதுவாகும். முன்னதாக 1999-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) யஷ்வந்த் சின்கா பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில், நாளை பிப்ரவரி 1-ந்தேதி 2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan