Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இணையவழி ஊடாகப் பணமோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

இலங்கையில் இணையவழி ஊடாகப் பணமோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை !

30 தை 2026 வெள்ளி 14:24 | பார்வைகள் : 517


வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாகப் பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரித்துள்ளது.

இலங்கையில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் சமீபநாட்களாகப் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர்.

குறித்த குறுஞ்செய்தியில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை காரணமாக உங்களது கடனட்டை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் செயற்படுத்த 24 மணித்தியாலங்களுக்குள் வழங்கப்பட்டுள்ள இணைய இணைப்பிற்குள் நுழைந்து தனிப்பட்ட விபரங்களை வழங்குமாறும் கோரப்படுகிறது.

அவ்வாறு விபரங்களை வழங்கத் தவறினால் அட்டை இ ரத்து செய்யப்படும் என அச்சுறுத்தப்படுகின்றது. இந்த இணைப்பினூடாக விபரங்களை வழங்குவோரைத் தந்திரமாகத் தொடர்பு கொள்ளும் மோசடிக்காரர்கள், அவர்களிடமிருந்து ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் ‘OTP’ இலக்கத்தைப் பெற்று வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை மோசடி செய்கின்றனர்.

அத்தோடு வாட்ஸ்அப் செயலி மூலம் வீடியோ அழைப்புகளை ஏற்படுத்தி, பொலிஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் தோன்றி தன்னை ஒரு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என அடையாளப்படுத்தி, கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஒருவர் , குறித்த நபரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பல வங்கிகளில் கடனட்டைகளைப் பெற்று மில்லியன் கணக்கில் மோசடி செய்துள்ளதாக மோசடிக்காரர்கள் மிரட்டல் விடுக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து பலர் சட்ட மற்றும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக மோசடிக்காரர்களுக்குப் பணம் செலுத்தியுள்ளனர்.

ஆகையால் பொதுமக்கள் விபரமறியாத போலி இணைய இணைப்புகளில் உள்நுழைய வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் எனத் தெரிவிக்கும் நபர்களிடம் உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்.

அவ்வாறு சந்தேகத்திற்குரிய அழைப்புகள் ஏதும் கிடைக்கப்பெறும் பட்சத்தில், உடனடியாக உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்