இலங்கையில் கொள்வனவு செய்த வேனை முதல்முறை செலுத்திய போதே விபத்து - தந்தைக்கு அதிர்ச்சி
30 தை 2026 வெள்ளி 12:58 | பார்வைகள் : 176
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், திம்புலபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் கிளையார் தோட்டத்திற்கு அருகில் இன்று (29) இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென் கிளையார் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, வீதியை விட்டு விலகிப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
கண்டியில் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த வேனை செலுத்தி வரும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற போது தந்தையே வாகனத்தைச் செலுத்தியுள்ளதுடன், அவரது மூன்று பிள்ளைகளும் அச்சமயம் வாகனத்தில் இருந்துள்ளனர்.
எவ்வாறாயினும் விபத்தில் ஒரு பிள்ளை காயமடைந்துள்ளதுடன், அப்பகுதி மக்களின் உதவியுடன் அப்பிள்ளையை கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏனையோருக்குக் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனம் பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றமையே விபத்திற்கான காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் திம்புலபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan