Paristamil Navigation Paristamil advert login

ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா எம்.பி.,! ராகுல் நிபந்தனை

ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா எம்.பி.,! ராகுல் நிபந்தனை

30 தை 2026 வெள்ளி 10:03 | பார்வைகள் : 678


டில்லியில் தன்னை சந்தித்த தி.மு.க., - எம்.பி., கனிமொழியிடம், 'ஆட்சியில் பங்கு, 41 சீட், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிகள், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத இடங்கள்' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் நிபந்தனைகள் விதித்துள்ளதால், கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

குழு அமைக்கவில்லை:

சென்னையில் கடந்த ஆண்டு டிச., 3ம் தேதி, தொகுதி பங்கீடு தொடர்பாக, தமிழக காங்கிரஸ் ஐவர் குழுவினர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் முதல்வரிடம் விளக்கினார்.

அதற்கு முதல்வர், 'தி.மு.க., தரப்பில் தொகுதி பங்கீடு பேச்சுக்கான குழு அமைத்த பின், தொடர்ந்து பேசலாம்' என பதில் அளித்துள்ளார். ஆனால், 'தி.மு.க., தன் முடிவை, டிச., 20ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்' என ஷோடங்கர் வலியுறுத்தியிருந்தார். ஆனால், இரண்டு மாதமாகியும் தி.மு.க.,வில் பேச்சு நடத்த குழு அமைக்கப்படவில்லை.

இந்நிலையில், டில்லியில் நேற்று முன்தினம் பார்லிமென்ட் கூட்டம் துவங்கியது. அதில் பங்கேற்க சென்றுள்ள தி.மு.க., - எம்.பி., கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்; அவருக்கு அனுமதி தரப்பட்டது.

அன்று இரவே, 'தி.மு.க., எந்த முடிவும் சொல்லாமல் இருக்கிறது' என பேட்டி அளித்த கிரிஷ் ஷோடங்கர், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவரது பேட்டி, தி.மு.க., தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டில்லியில் சோனியா வீட்டுக்கு நேற்று கனிமொழி சென்றார்; உடல் நலம் பாதிப்பை காரணமாக கூறி, சோனியா சந்திக்க மறுத்து விட்டார். பின், ராகுலை சந்தித்து, 20 நிமிடங்கள் கனிமொழி பேசினார்.

அப்போது ராகுலிடம், 'ஆட்சியில் பங்கு தரும் கொள்கை தி.மு.க.,விடம் இல்லை. தே.ஜ., கூட்டணியில் கூட, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஏற்கவில்லை.

உறவை பாதிக்கும்:

அப்படியிருக்கும்போது, அதை தி.மு.க., எப்படி ஏற்க முடியும்? தொடர்ந்து அழுத்தம் தந்தால், கூட்டணி உறவை பாதிக்கும். கடந்த முறையை விட கூடுதலாக இரண்டு தொகுதிகளுடன், 27 தர வாய்ப்பு உள்ளது' என கனிமொழி கூறியிருக்கிறார்.

அதற்கு ராகுல், 'ஆட்சியில் பங்கு, 41 சீட், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிகள், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத இடங்கள் வேண்டும்; அது தொடர்பாக, காங்கிரசின் ஐவர் குழுவிடம் பேசுங்கள்' என கூறியிருக்கிறார். மேலும், 'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு, தி.மு.க., அரசு எந்த ஒத்துழைப்பும் தரவில்லை' என்ற வருத்தம் கட்சியினருக்கு இருப்பதாகவும் ராகுல் கூறியிருக்கிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்