Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய சந்தையை இந்திய பொருட்களால் ஆக்கிரமியுங்கள்: பிரதமர் மோடி

ஐரோப்பிய சந்தையை இந்திய பொருட்களால் ஆக்கிரமியுங்கள்: பிரதமர் மோடி

30 தை 2026 வெள்ளி 09:35 | பார்வைகள் : 633


ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம், அங்குள்ள 27 நாடுகளிலும் இந்திய தயாரிப்புகளுக்கான சந்தையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி சர்வதேச தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்து ஐரோப்பிய யூனியன் சந்தையை, நம் தயாரிப்புகளால் ஆக்கிரமிக்க வேண்டும், என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி உரையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்றைய அலுவல்கள் துவங்கும் முன், பார்லிமென்ட் வளாகத்தில், நிருபர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

தற்போது தாக்கல் செய்யப்பட இருப்பது, இந்த நுாற்றாண்டின் 2வது காலாண்டின், முதல் மத்திய பட்ஜெட். தொடர்ச்சியாக ஒன்பது முறை, பட்ஜெட் தாக்கல் செய்யும், நாட்டின் முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். பார்லிமென்ட் வரலாற்றில் இது பெருமை மிக்க தருணம்.

தன்னம்பிக்கை பலம் கொண்டதாக இருந்த இந்தியா, தற்போது நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக மாறியிருப்பதோடு, உலக நாடுகளின் ஒருவித ஈர்ப்பு மையமாகவும் ஆகியுள்ளது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில், இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் கையெழுத்திட்டுள்ளன.

ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளிலும், இந்திய தயாரிப்புகளுக்கான சந்தையின் கதவுகள், இதன்மூலம் திறக்கப்பட்டுள்ளன. இதை, இந்திய உற்பத்தியாளர்கள், பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  

சர்வதேச தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம், ஐரோப்பிய யூனியன் சந்தையை கைப்பற்றி, அதை, இந்தி ய தயாரிப்புகளால் முழுதுமாக ஆக்கிரமிக்க வேண்டும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்துவதற்கான களம். இரு சபைகளிலும், ஆரோக்கியமான விவாதங்களை நடத்த, எம்.பி.,க்கள் ஒத்துழைக்க வேண்டும். இடையூறுகள் ஏற்படுத்துவதை, எதிர்க்கட்சிகள் விட்டுவிட வேண்டும்.

மாறாக, மக்களின் குரல்களுக்கு மதிப்பு தரும் விதமாக, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டு, பார்லிமென்ட்டில் எம்.பி.,க்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்