சிறுபான்மையின சலுகைக்காக மதம் மாறுவது புது ரக மோசடி: உச்ச நீதிமன்றம்
29 தை 2026 வியாழன் 13:15 | பார்வைகள் : 625
ஹரியானாவில் சிறுபான்மையின இடஒதுக்கீடு சலுகைகளை பெற, உயர் ஜாதி பிரிவினர் புத்த மதத்திற்கு மாறுவது புது ரக மோசடியாக இருக்கிறது' என, உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிஸாரில் வசித்து வருபவர் நிகில் குமார் புனியா. உயர் ஜாதி ஹிந்துவாக இருந்தவர், புத்த மதத்திற்கு மாறினார். கல்வி நிறுவனத்தில் சிறுபான்மையின சலுகை பெற வேண்டும் என்ற நோக்கில், அவர் மதம் மாறியதாக கூறப்படுகிறது. மேலும், தனக்கு சிறுபான்மையின சான்றிதழ் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதியும் ஹிஸார் பகுதியை சேர்ந்தவர் என்பதால், புனியாவின் சமூக பின்னணி குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
நீங்கள் தான் புனியாவா? எந்த வகையில் நீங்கள் சிறுபான்மையினர்? புனியாவில் எந்த பிரிவு நீங்கள்? என அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். அதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''அவர் ஜாட் புனியா சமூகத்தை சேர்ந்தவர், என பதிலளித்தார்.
அப்படியெனில், அவர் எப்படி சிறுபான்மையினராக முடியும்? என, நீதிபதி கேள்வி எழுப்ப, புனியா புத்த மதத்தை தழுவி விட்டார், என, வழக்கறிஞர் விளக்கம் கொடுத்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், 'சிறப்பு! இது மோசடியில் புது ரகமாக இருக்கிறது' என விமர்சித்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மதம் மாறியதை வைத்து உயர் ஜாதி ஹிந்து ஒருவர், சிறுபான்மையின அந்தஸ்து கோர முடியுமா? சிறுபான்மையின சான்றிதழ்கள் பெற அரசு வகுத்த விதிகள் என்ன?
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை சேராத உயர் ஜாதி பொதுப் பிரிவினர் மதம் மாறியதால், புத்த மதத்தின் அடிப்படையில் சிறுபான்மையினர் என எப்படி கூற முடியும்? இது தொடர்பாக, ஹரியானா மாநில தலைமைச் செயலர் உச்ச நீதிமன்றத்திற்கு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நிகில் குமார் புனியாவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், சிறுபான்மையின சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் குறித்த விசாரணையை மட்டும் ஒத்திவைத்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan