Paristamil Navigation Paristamil advert login

கட்சியை விட தேச நலனே முக்கியம்; காங்., எம்.பி., சசி தரூர்

கட்சியை விட தேச நலனே முக்கியம்; காங்., எம்.பி., சசி தரூர்

25 தை 2026 ஞாயிறு 12:49 | பார்வைகள் : 180


காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு விரோதமாக என்றுமே செயல்பட்டது இல்லை. 'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரத்தில் மட்டுமே கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக முடி வெடுத்தேன். ஏனெனில், கட்சியை விட தேச நலனே முக்கியம். ''அதற்காக வருத்தம் தெரிவிக்கவும் போவதில்லை,'' என, காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சசி தரூர் தெரிவித்து உள்ளார்.

சலசலப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யான சசி தரூர், சமீப காலங்களாக பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், கருத்துகளை கூறி வருவதாக விமர்சிக்கப்படுகிறார். இதன் காரணமாக, சொந்தக் கட்சிக்குள்ளேயே அவர் ஓரங்கட்டப்படுவதாக பேசப்படுகிறது.

eகாங்கிரஸ் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், சமீபத்தில் கொச்சிக்கு வந்தபோது கூட, சசி தரூரை கண்டுகொள்ளாதது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், காங்கிரஸ் மாநில தலைவர்களும், தொடர்ந்து அவரை ஓரங்கட்டி வருவதால், கட்சி மேலிடத்தின் மீது சசி தரூர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.\u003cbr

நாட்டின் பாதுகாப்பு என்று வந்துவிட்டால் தேசத்திற்கு தான் முன்னுரிமை தர வேண்டும்

இந்தச் சூழலில், ஆப்பரேஷன் சிந்துார் விவகாரத்தில் மத்திய அரசை பாராட்டி தெரிவித்த கருத்துக்காக ஒருபோதும் வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை என, சசி தரூர் திட்டவட்டமாக கூறியுள்ளார். கோழிக்கோட்டில் நேற்று நடந்த கேரள இலக்கிய திருவிழாவில் பங்கேற்ற அவர், இது குறித்து கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு விரோதமாக இதுவரை நான் நடந்து கொண்டதில்லை.

ஆப்பரேஷன் சிந்துார் விவகாரத்தில் மட்டுமே கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக என் முடிவு அமைந்தது. ஆனால், அதற்காக வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை. ஏனெனில், கட்சி ரீதியாக பிளவுபட்டு இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு என்று வந்துவிட்டால், தேசத்திற்கு தான் முன்னுரிமை தரவேண்டும். அதன்படியே நான் நடந்து கொண்டேன்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, 'மத்திய அரசு அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அந்த நடவடிக்கை ஆற்றல் மிக்கதாக இருக்க வேண்டும்' என நாளிதழில் கட்டுரை எழுதியிருந்தேன்.

தக்க பாடம்

இதில் ஆச்சரியம் என்னவெனில், நான் பரிந்துரைத்தபடியே மத்திய அரசு ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டியது. 'தேசத்தை அழித்துவிட்டு, யாரை வாழ வைக்கப் போகிறீர்கள்' என முன்னாள் பிரதமர் நேரு கூட கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தேசத்திற்கு ஆபத்து, பாதுகாப்புக்கு பாதகமான சூழல் ஏற்படும்போது, தேச நலனுக்காகவே நாம் அனைவரும் முன் நிற்க வேண்டும். அதன்படியே, அரசியல் வேறுபாடுகளை மறந்து, தேச நலனுக்கான கருத்துகளை தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்