பிரதமர் பிரசாரத்தால் பழனிசாமி உற்சாகம்: பா.ஜ.,வுக்கு 30 சீட் தர தற்போது தயார்
25 தை 2026 ஞாயிறு 07:54 | பார்வைகள் : 770
தி.மு.க.,வை எதிர்கொள்ள பலமான கூட்டணி அமைந்த மகிழ்ச்சியிலும், பிரதமர் மோடியின் பிரசாரம் தந்த உற்சாகத்திலும் இருக்கிறார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. அதன் காரணமாக, இதுவரை பா.ஜ.,வுக்கு, 20 தொகுதிகள் தான் தர முடியும் என்றவர், தற்போது 30 சீட் தர முன்வந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட்டு பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தது. அந்த தேர்தலில் பெற்ற ஓட்டு சதவீதம் அடிப்படையில், வரும் சட்டசபை தேர்தலில் 83 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., இணைந்ததால், அக் கட்சியே தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது.
எனவே, பா.ஜ.,வுக்கு 40 தொகுதிகளை ஒதுக்குமாறு இரு மாதங்களுக்கு முன், பழனிசாமியிடம் பா.ஜ., நிர்வாகிகள் வலியுறுத்தினர். அவரது தரப்பில், 20 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் அ.தி.மு.க., கூட்டணியில் சேர, பா.ம.க., - அ.ம.மு.க., தயக்கம் காட்டின. தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக இருந்த பைஜெயந்த் பாண்டா மாற்றப்பட்டு, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் நியமிக்கப்பட்டார்.
அவரும், பா.ஜ., மேலிட தலைவர்களும் பழனிசாமியுடன் பேச்சு நடத்தினர். கூட்டணியை பலமாக்க சில ஆலோசனைகளை அளித்தனர். இதைத் தொடர்ந்து, பா.ம.க., அன்புமணி இம்மாதம் 7ம் தேதியும், அ.ம.மு.க., தினகரன் 21ம் தேதியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தனர். கடந்த சில தினங்களில், பல்வேறு சிறிய கட்சிகளும் கூட்டணியில் சேர்ந்துள்ளன.
இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது. இந்த கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை, மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியே துவக்கி வைத்தார். அவர் சென்றதும், பழனிசாமி, தினகரன், அன்புமணி என, கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.
இது, கூட்டணி கட்சி களின் தொண்டர்களிடம் இணைப்பை ஏற்படுத்திஉள்ளது. இதுவும், பா.ஜ., ஆலோசனையின்படியே நடந்தது.
எனவே, பா.ஜ.,வின் நடவடிக்கையால், தேசிய ஜனநாயக கூட்டணி பலம் வாய்ந்ததாக மாறி இருப்பதுடன், பிரதமர் மோடியே வந்து தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்திருப்பதால், பழனிசாமி உற்சாகத்தில் உள்ளார்.
அதனால், இதுநாள் வரை, பா.ஜ.,வுக்கு 20 தொகுதிகள் என்றவர், தற்போது 30 'சீட்' தர முன்வந்துள்ளார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு சிறிய கட்சிகள், இரட்டை இலை சின்னத்துக்கு பதில் தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்புகின்றன.
எனவே, அக்கட்சிகளுடன் சேர்த்து, மொத்தம் 35 தொகுதிகளை பா.ஜ.,வுக்கு ஒதுக்க, பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
பழனிசாமி -- தினகரன் வீடுகளில் பரஸ்பரம் விருந்து
அ.தி.மு.க., - அ.ம.மு.க., இடையே பிணைப்பை ஏற்படுத்த, பழனிசாமி மற்றும் தின கரன் தரப்பில் பரஸ்பரம் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய, பா.ஜ., தரப்பில் யோசனை சொல்லப்பட்டு இருக்கிறது.
பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
ஒன்றாக மேடை ஏறி, பகையை மறந்து அண்ணன் - தம்பியாகி விட்டோம்' என, பழனிசாமியும், தினகரனும் கூறி வருகின்றனர். ஆனாலும், அவர்களின் மனம் ஒன்றாகவில்லை. போதாக்குறைக்கு பழனிசாமியும், தினகரனும் கூட்டணிக்கு முன் மாறி மாறி பேசியதை, சமூக வலைதளத்தில் தி.மு.க.,வினர் வெளியிட்டு வருகின்றனர்.
இதனால், கீழ்மட்டத்தில் அ.தி.மு.க., - அ.ம.மு.க., நிர்வாகிகள் இடையே பிணக்கு ஏற் படுகிறது. மேலும், இதை வைத்தே தங்கள் பக்கம் ஆட்களை இழுக்க தி.மு.க., முயற்சிக்கிறது.
இதே நிலை நீடித்தால், 'ரிஸ்க்' எடுத்த பா.ஜ.,வுக்கு எந்த பயனும் ஏற்படாது. எனவே தான், பழனிசாமி வீட்டில் தினகரன் கட்சியினருக்கும், தினகரன் வீட்டில் பழனிசாமி தரப்பினருக்கும் விருந்து அளித்து உபசரிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதுபோன்று பல மாநிலங்களில் செய்து, பகையாளியாக இருந்தவர்களை பங்காளியாக்கி இருக்கிறது எங்கள் கட்சி மேலிடம். இருவரும் மனம் விட்டு பேசினால் தான், கீழ்மட்டம் வரை பிணைப்பு ஏற்பட்டு தேர்தல் வேலை வேகமாக நடக்கும். அதன்படி, விருந்து ஏற்பாடுகள் பிப்ரவரிக்குள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan