விரதம் இருந்தால் புற்றுநோய் வராது என்பது உண்மையா?
24 தை 2026 சனி 15:10 | பார்வைகள் : 508
விரதம் இருந்தால் புற்றுநோய் வராது என சொல்லப்படுவதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது, அந்தக் கருத்து சொல்லப்படுவதன் பின்னணி என்ன என்பது பற்றி சென்னையை சேர்ந்த மார்பகப் புற்றுநோய் மருத்துவர் செல்வி ராதாகிருஷ்ணா. அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்,
“விரதம் இருக்கும்போது புற்றுநோய் திசுக்கள் அழியுமா என்பதை அறியும் முன்னர், உடலில் திசுக்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம். நம் உடலில் பொதுவாகவே திசுக்கள் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கும். அதாவது உடலில் உருவாகும் ஒவ்வொரு திசுவும் இரண்டாக பிரிந்து, பின் அவை இரண்டும் நான்காக பிரிந்து என இவற்றின் பெருக்கம் உடலில் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்த செயல்பாடுகளின்போது, சில நேரம் ஏதாவது சின்ன சின்ன தவறுகள் ஏற்படக்கூடும். உதாரணமாக தவறான (நோய்த்தாக்கம் கொண்ட) திசுக்கள், பழுதடைந்த திசுக்கள் உருவாகக்கூடும். அப்படியான திசுக்களை நம் உடலின் நோய் எதிர்ப்புத் திறன் சாமர்த்தியமாக கண்டறிந்து, ‘இது நம் உடலுக்கு ஏற்றதல்ல’ என சமிக்ஞை அனுப்பி அதை அழித்துவிடும்.”
“ஒருவேளை அந்த தவறான திசு நம் நோய் எதிர்ப்புத் திறனால் அழிக்கப்படவில்லை எனும்போதுதான் ஆபத்து ஏற்படுகிறது. அழிக்கப்படாமல் விடப்படும் அந்த திசுக்கள் பன்மடங்காக உயர்ந்து, உடலில் ஆரோக்கியமாக இருக்கும் பிற திசுக்களையும் பாதிக்கும். இப்படி கட்டுப்பாடின்றி, பன்மடங்காக உருவாகி, நல்ல திசுக்களையும் கெடுக்கும் செல்கள்தான் புற்றுநோய் திசுக்கள் எனப்படுகின்றன. இந்த புற்றுநோய் திசுக்கள் பன்மடங்காகும்போது, குறிப்பிட்ட பகுதி முழுக்க முதலில் பரவி அங்குள்ள உறுப்புக்களின் செயல்பாட்டை பாதிக்கும். அதுவே உடல் முழுக்க பரவும்போது, உடலின் பல உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கி உயிர் ஆபத்துகூட ஏற்படும் அபாயம் உருவாகிறது.”
“இந்த இடத்தில், முதற்கட்டத்திலேயே அந்த ஆபத்தான செல்கள் அழிக்கப்பட்டிருந்தால் நம்மால் புற்றுநோயை தடுத்திருக்க முடியும். அதற்கு நம் நோய் எதிர்ப்புத்திறன் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருந்திருக்க வேண்டும். அதேபோல ஆட்டோஃபேஜி (Autophagy) எனப்படும் மோசமான செல்கள் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நடைமுறை நம் உடலில் இயற்கையாக நிகழ வேண்டும். அன்றாடம் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுமுறையும், அவ்வப்போது விரதமும் இருக்கும்போது நம் உடலில் ஆட்டோஃபேஜி நடைமுறை நமக்கு உதவும். உதாரணமாக விரதம் இருக்கும்போது, எதுவுமே சாப்பிடாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடிக்கும்போது உடலில் Autophagy எளிமையாக நிகழும்.”
Autophagy நடப்பது எப்படி? “24 மணி நேர விரதம் இருக்கிறோம் என்றால், கடைசியாக சாப்பிட்ட உணவிலுள்ள குளுக்கோஸை முதல் 6 – 8 மணி நேரம் நம் உடல் தன் ஆற்றல் தேவைக்காக உடல் எடுத்துக் கொள்ளும். பின் 8 – 12 / 16 மணி நேரத்துக்கு நம் தசைகளிலுள்ள சேமித்து வைக்கப்பட்ட க்ளைகோஜனை எடுத்துக் கொண்டு ஆற்றல் கிடைக்கும். 16 மணி நேரத்துக்குப் பின், நம் உடலிலுள்ள தேவையற்ற / பழுதடைந்த திசுக்களை சுத்தப்படுத்தி அதிலிருந்து ஆற்றலை உடல் எடுத்துக் கொள்ளும். இதன்மூலம் உடல் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும்.”
“மேற்குறிப்பிட்ட நடைமுறையின் நன்மைகளை கருத்தில் கொண்டே, இண்டர்மிண்டட் ஃபாஸ்டிங் என்ற பெயரில் 16 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்துக்கொண்டு, 8 மணி நேரம் சாப்பிடும் நடைமுறையை அன்றாடம் பின்பற்ற மருத்துவர்கள் அறிவுறுத்துகிறோம். இந்த நடைமுறையோடு சேர்த்து வாரம் ஒருமுறையோ இருவாரத்துக்கு ஒருமுறையோ 24 மணி நேரம் விரதம் இருப்பதும் (தண்ணீர், சர்க்கரை இல்லாமல் ப்ளாக் டீ / காஃபி உட்கொள்ளலாம்) அறிவுறுத்தப்படுகிறது. இவை இரண்டுமே உடலை சுத்தப்படுத்தும். அதன்மூலம் புற்றுநோய்க்கு காரணமான செல்கள் அழியக்கூடும். நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய் உள்ளவர்கள், விரதம் இருக்கும்போது மருத்துவ ஆலோசனையை பெறுவது அவசியம்” என்கிறார் மருத்துவர்.
இந்த இடத்தில் விரதம் மட்டுமே புற்றுநோயை அழிப்பதில்லை. விரதம் இருப்பதால் ஒரு சில கேன்சர் செல்கள் அழியும். உடற்பருமனிலிருந்து மீள்வது, ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது, சர்க்கரையை முடிந்தவரை தவிர்ப்பது போன்றவையெல்லாம் எந்த அளவுக்கு உதவுமோ அதேயளவுக்குதான் விரதத்தின் பலன்களும் இருக்கும். முற்றிலுமாக விரதம் இருப்பவர்களுக்கு மட்டும் புற்றுநோயே வராது என சொல்லவிட முடியாது.
உடற்பயிற்சி செய்தால் புற்றுநோயே வராது (அ) இந்த உணவை அன்றாடம் சாப்பிட்டால் புற்றுநோயே வராது (அ) ஒல்லியாக இருந்தால் புற்றுநோயே வராது என்று எதையும் தனித்தனியாக கூறுவது சரி கிடையாது. விரதம் இருப்பதும், அன்றாடம் உடற்பயிற்சி செய்வதும், நல்ல உணவுகளை சாப்பிடுவதும், உடற்பருமன் இன்றி இருப்பதும் என ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பதே புற்றுநோயிலிருந்து நம்மை காக்கும்.
இவற்றை தாண்டியும்கூட, சில நேரம் மரபணு காரணமாக நமக்கு புற்றுநோய் ஏற்படலாம். எனவே எந்தவொரு ஆரோக்கிய பழக்க வழக்கமும் புற்றுநோயை முற்றிலுமாக தடுக்க உதவாது. ஆகையால் எப்போதும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம். எந்தவொரு அறிகுறியையும் உதாசீனப்படுத்தக் கூடாது. ஒருவேளை நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுத்த போதும், புற்றுநோய்க்கான அறிகுறி ஏதேனும் தெரிந்தால் முதல்நிலையிலேயே மருத்துவரை அணுக வேண்டும். அதுமட்டுமே உங்களை நோயிலிருந்து காக்கும். ‘நான் ஆரோக்கியமான பழக்கத்தை பின்பற்றுகிறேன் / விரதம் இருக்கிறேன் / இந்த உணவை சாப்பிடுகிறேன் / உடற்பருமன் இல்லை’ என நினைத்து காலம் தாழ்த்திவிட வேண்டாம்.
விரதம் இருக்கும்போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி முழுமையாக கட்டுப்படுத்தப்படாதது ஏன் தெரியுமா? புற்றுநோய் செல்கள் பிற செல்களை போலவே குளுக்கோஸிலிருந்து மட்டுமே ஆற்றல் எடுத்து செயல்படுவதில்லை. உடலில் எங்கெல்லாம் ஆற்றல் கிடைக்கும் வழி இருக்கிறதோ அதையெல்லாம் தேடி உட்கொண்டு பன்மடங்காக உருவெடுக்கும் அபாயம் கொண்டது அது. ஆகவே விரதத்தின் மூலம் மட்டுமே நாம் முழுமையாக புற்றுநோய் செல்களை அழித்துவிடலாம் என்று பொருள் கொள்ள முடியாது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan