மத வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று விலக்களித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை
24 தை 2026 சனி 14:20 | பார்வைகள் : 718
மத வழிபாட்டு தலங்களுக்கு கலெக்டரின் தடையில்லா சான்று கோராமல், கட்டட திட்ட அனுமதி வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்த கலாநிதி தாக்கல் செய்த பொதுநல மனு:
பொது வழிபாடு அல்லது மத நோக்கங்களுக்காக கட்டப்படும் கட்டடங்களுக்கு, கலெக்டரின் முன் அனுமதி கட்டாயம். அந்த கட்டுமானத்தால் பொது அமைதி, நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என கருதினால், அனுமதி மறுக்கும் அதிகாரம் கலெக்டருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இக்கட்டுப்பாடு அவசியம் என, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளன. 'சம்பந்தப்பட்ட கலெக்டரின் தடையில்லா சான்று, விண்ணப்பத்துடன் இணைக்கப்படாவிடில், எந்தவொரு மத கட்டடத்தின் கட்டுமானத்திற்கும் திட்ட வரைபட அனுமதி வழங்கப்படாது' என, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கோவில், மசூதி, சர்ச், மடங்கள் மற்றும் பொதுவாக வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படும் இடங்களுக்கு பொருந்தும். தடையில்லா சான்று என்பது ஒரு வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல; சமூக பதற்றம், சட்டம் - ஒழுங்கு, இடத்தின் தன்மை, சுற்றிலும் வசிப்பவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பீடு செய்து, தடையில்லா சான்று வழங்க வேண்டும். இது ஒரு சட்டப்பூர்வ பாதுகாப்பு.
மாநிலத்தில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்களை தொடர்ந்து, அமைதி, நல்லிணக்கத்தை பேண மற்றொரு மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், புது மத நிறுவனங்களை நிறுவக்கூடாது என, நீதிபதி வேணுகோபால் கமிஷன் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது. அதை அரசு ஏற்று, 1986ல் அரசாணை பிறப்பித்தது. இதன்படி, பதற்றம் நிறைந்த பகுதிகளில், எந்தவொரு பயன்பாட்டிற்காக கட்டப்படும் கட்டுமானத்திற்கும், கலெக்டரின் முன் அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில், 2019 பிப்., 4 முதல் 2024 மார்ச் 6 வரை குடியிருப்புகள், பல்நோக்கு மண்டபங்கள் போன்ற பிற பயன்பாடுகளுக்காக, திட்ட அனுமதி பெற்ற பின், மத வழிபாட்டு கட்டடங்களாக செயல்படும் அனைத்து கட்டடங்களும், விதிகளை பூர்த்தி செய்தால், கலெக்டரிடமிருந்து தடையில்லா சான்று கோராமல், மத கட்டடங்களாக மாற்ற திட்ட அனுமதி வழங்க பரிசீலிக்க வேண்டும்.
2019 பிப்., 4 முதல் 2024 மார்ச் 6 வரை மத கட்டடங்களுக்காக திட்ட அனுமதி கோரி விண்ணப்பித்து, கலெக்டரின் தடையில்லா சான்று பெறப்படாத காரணத்தால் நிலுவையில் வைத்துள்ள அனைத்து விண்ணப்பங்களும், விதிமுறைகளை பூர்த்தி செய்தால், தடையில்லா சான்று கோராமல் திட்ட அனுமதி வழங்க பரிசீலிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில் உள்ள குறிப்பிட்ட பிரிவின் படி, மத வழிபாட்டு கட்டடங்களுக்காக, கலெக்டரிடமிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற நிபந்தனை, 2024 மார்ச் 7 முதல் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்' என, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை 2026 ஜன., 8ல் அரசாணை பிறப்பித்தது.
இது, அரசியலமைப்பிற்கு முரணானது. இதனால், சட்டம்- - ஒழுங்கு பிரச்னை காரணமாக கலெக்டரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மத கட்டடங்களின் கட்டுமானம் அல்லது மத நோக்கத்திற்கு பயன்படுத்த மாற்றம் செய்ய அனுமதி கோரிய விண்ணப்பங்கள், உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து தானாகவே அனுமதி பெற்று விடுகின்றன.
பிரச்னைக்குரிய இந்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், என்.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்தனர்.
அவர்கள் பிறப்பித்த உத்தரவு: அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தமிழக தலைமைச் செயலர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலர், நகர் ஊரமைப்புத் துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. பிப். 20ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan